மக்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் அரசியல் தலைமைகள்: திலீபன்

115 0

வடமாகாணத்தில் உள்ள 75 வீதமான அரசியல் தலைமைகள் மலையக மக்களை கறிவேப்பிலையாக பாவிக்கக்கூடிய சூழ்நிலையே நிலவுகிறது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மலையக மக்களின் 200வது வருட பூர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கொழும்பு செல்லும் போதெல்லாம் எதோ சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கு மட்டும்தான் பிரச்சினை இருப்பது போல அங்கு பேசப்படும்.

ஆனால் வடக்கிலே கால் வைக்கின்ற போது தமிழர்களுக்குள்ளே பல பிரச்சினை இருக்கிறது. குறிப்பாக மலையக தமிழர், இந்த மலையக தமிழர்கள் தொடர்பாக வந்திருக்கக்கூடிய உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.பொதுவாக 75 வீதமான வடமாகாணத்தில் இருக்கக்கூடிய அரசியல் தலைமைகளும் மலையக மக்களை கறிவேப்பிலையாக பாவிக்கக்கூடிய சூழ்நிலைதான் வடமாகாணத்தில் நிலவுகிறது.

வவுனியா வடக்கில் மலையக மக்கள் இருக்க கூடிய இடங்களில் உள்ள குளங்கள் , வயல்கள் அவர்கள் பாவிக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இன்னும் ஆழமாக கூறினால் மலையக மக்கள் இருக்கின்ற குளங்களிலுள்ள மீன்களை கூட பிடிக்க முடியாது.

அப்படியான சமுதாயமாக அரச உத்தியோகத்தர்களில் உள்ள முக்கால்வாசி பேர் இந்த மக்களை ஒடுக்க கூடிய நிலை இருக்கிறது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மக்களுக்கு என்னால் முடிந்தளவு உதவி செய்வதற்குரிய முனைப்பை காட்டி வருகின்றேன்.

இந்த மக்களுக்கு காணி, வயல் இருக்கும் ஆனால் அந்த மக்கள் பயன்படுத்த முடியாது. முருகண்டி ஆலயத்திற்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு கிராமம் ஆரோக்கியபுரம் கிராமம்.

அங்குள்ள மலையக மக்களுக்கான காணி ஆவணம் முதற்கொண்டு இருப்பதற்கு இடம், மலசலகூடம் போன்ற எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

அந்த மக்களை வடக்கத்தயார் என்று சொல்லக்கூடிய சில அரசியல் தலைமைகளை அதே மக்கள் சிலர் மேலான இடத்தில் வைத்து கொண்டாடுவதை நினைக்கும் போது மனம் வேதனையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.