கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டேன் என கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கச்சேரியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக கடமையாற்றிய விமல்ராஜ் பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், அவர் அதற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பதவியை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய தனது கடமைகளை நேற்று திங்கட்கிழமை (10.07.2023) சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டேன்.இருப்பினும் சிலர் அரசியல் இலாபங்களுக்காக என்மீது வீண்பழி சுமத்தியவர்களுக்கு இன்றைய நாள் ஒரு பதிலடியான நாள்.
கடந்த 12 வருடங்களுக்கு மேலாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக திருகோணமலை,முல்லைத்தீவு,கிளிநொச்சி,மட்டக்களப்பு ,யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் பணியாற்றியுள்ளேன்.
எனக்கு வழங்கப்பட்ட கடமையை சரியாக இதுவரை செய்துள்ளேன். இருந்தபோதும் பல துயரங்களை சந்தித்தேன். காணிக்கு உறுதி வழங்குவது, காணி சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் அதற்கான ஒரு சட்ட ஆலோசனை பிரிவு உள்ளதுடன், கள உத்தியோகத்தரிடம் தொடங்கி அமைச்சர் வரைக்கும் உள்ள அனைவரது கையொப்பத்துடன் உறுதி வழங்கப்படும்.
ஊடகவியலாளர் மட்டுமல்ல எந்த ஒரு தனிநபர்களுக்கும் காணி வழங்க முடியாது. காணி வழங்குவதற்கான சட்டம் இருக்கின்றது. அந்த வகையில் தமிழ் ஊடகவியலாளர் சங்கம் அரசாங்க அதிபரிடம் தங்களது கோரிக்கையை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை அடுத்து அரசாங்க அதிபர் விசேடமாக ஊடகவியலாள்களுக்கு காணி வழங்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதனையடுத்து முறையாக காணி கச்சேரி வைத்து அதனை தலைமை காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு சிபாரிசு செய்யப்பட்டு அதனடிப்படையில் காணிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கினோம்.
அதில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் முனைப்பாக செயற்பட்டார். இதனை சில அரசியல்வாதிகள் பயன்படுத்தி ஊடகவியலாளர்களுக்கு எந்த வகையில் காணி வழங்கப்பட்டது என குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள்.
எனக்கு எதிராக அரசியல்வாதிகளை முற்றுமுழுதாக பயன்படுத்தி வீண்பழி சுமத்தி எனது சேவையை இடைநிறுத்தி முடிவுக்கு கொண்டுவந்து அனுப்பினார்கள். அந்த இடத்தில் மீண்டும் சேவையாற்ற வேண்டும் என மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. மீண்டும் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.