அவுஸ்திரேலிய – இலங்கை அதிகாரிகள் பொதுமக்களிடம் கூட்டாக விடுத்துள்ள வேண்டுகோள்

173 0
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோர் அவர்களது நாட்டுக்கே திருப்பியனுப்பப்படுவதுடன் அவர்களிடம் தண்டப்பணமும் அறவிடப்படும் என்றும், எனவே உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்றும் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை கடந்த காலங்களில் சடுதியாக அதிகரித்ததையடுத்து, அதனைத் தடுப்பதற்குரிய கூட்டிணைந்த நடவடிக்கைகளை இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இணைந்து முன்னெடுத்துவருகின்றன. அதன் ஓரங்கமாக அவுஸ்திரேலியாவின் கூட்டு முகவர் பணிக்குழுவினால் எல்லைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் கடந்த வாரம் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வருகையின் நோக்கம் மற்றும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத குடிப்பெயர்வைத் தடுத்தல் மற்றும் அதன் ஆபத்துக்கள் குறித்துத் தெளிவுபடுத்தல் ஆகியவற்றை இலக்காகக்கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ், தான் இப்பதவிக்கு வந்து 17 மாதங்கள் கடந்திருப்பதாகவும், அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இது இலங்கைக்கான 4 ஆவது விஜயம் எனவும் சுட்டிக்காட்டியதுடன் இப்பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்ற ஆட்கடத்தலை முறியடிப்பதற்கு இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகமுக்கியமானது என்று குறிப்பிட்டார்.

அந்தவகையில் ஆட்கடத்தல் முயற்சிகளை முறியடிப்பதை இலக்காகக்கொண்ட இலங்கையின் செயற்பாடுகள் பெரிதும் வரவேற்கத்தக்கவை என்று தெரிவித்த அவர், ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் சமூகத்துக்கு நன்மை செய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாக பின்தங்கிய நிலையிலுள்ள மக்களைப் பயன்படுத்தி பெருமளவு பணம் உழைத்துக்கொள்வதை மாத்திரமே பிரதான நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவரைத்தொடர்ந்து உரையாற்றிய கடற்படை நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, ‘கடந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்புத்தொடர்புகள் வலுவடைய ஆரம்பித்தன.

இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, பயிற்சி வழங்கல், பரஸ்பர தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் ஊடாக பிராந்தியப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாக இருக்கின்றது. 2009 இல் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து பெருமளவானோர் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் குடிப்பெயர்ந்ததுடன் அவர்களில் பெரும்பாலானோர் வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களாவர். அதனையடுத்து இச்சட்டவிரோத குடிப்பெயர்வைத் தடுத்து நிறுத்துவதற்கு இருநாடுகளும் கூட்டிணைந்து மேற்கொண்ட நடவடிக்கைளின் பலனாக கடந்த சில வருடங்களாக இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிந்துள்ளது’ என்று தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ‘ஸீரோ சான்ஸ்’ என்ற கொள்கையின் பிரகாரம், படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோர் அவர்களது நாட்டுக்கே திருப்பியனுப்பப்படுவதுடன் அவர்களிடம் தண்டப்பணமும் அறவிடப்படும் என்று சுட்டிக்காட்டிய அவர்கள், எனவே இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.