திருடர்களுடன் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தை தேட முடியுமா ?

105 0

நாடு வங்குரோத்து அடைந்தமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளேன். திருடர்களுடனும்,  ஊழல்காரர்களுடனும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தை தேட முடியுமா? முடியாது.

இந்த குழுவினால் இலங்கையின் வங்குரோத்துக்கு காரணம் தேடி பயனில்லை. வீழ்ச்சிக்கு காரணமானவர்களே இதிலுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கம்பஹா நிட்டம்புவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எமது இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த காரணத்தை தேடிப்பார்க்கும் குழுவில் நியமித்துள்ளவர்களை நோக்கும் போது அதில் யாரை நியமித்துள்ளார்கள்? சாகர காரியவசம், மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியராச்சி பொருளாதார வீழ்ச்சியை தேடும் குழுவின் உறுப்பினர்களாவர்.

அதில் பாரிய வேடிக்கை என்னவென்றால் அந்த குழுவின் தலைவர் சாகர காரியவசம். பசிலுக்கு சார்பானவர். பசிலை போன்றவர்.

பசில் ராஜபக்ஷவே நாட்டின் பொருளாதார அமைச்சர், நிதி அமைச்சர், பொருளாதார வீழ்ச்சிக்கு பதில் கூற வேண்டிய பிரதான நபர். இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கொன்றும் உள்ளது.

தற்போது அவரது அடிவருடி சாகர காரியவசத்தை இதன் தலைவராக நிமித்துள்ளனர். இந்த குழுவில் எனது பெயரை இணைத்து கொண்டது சோகமான விடயமாகும். இந்த திருடர்களுடன், இந்த ஊழல்காரர்களுடனும் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்தை தேட முடியுமா? முடியாது.

எனவே இந்த குழுவிலிருந்து இராஜினமா செய்கிறேன். அடுத்த வாரமே கடிதமொன்றை அனுப்பவுள்ளேன். இந்த குழுவினால் இலங்கையின் வங்குரோத்து காரணம் தேடி பயனில்லை.

வீழ்ச்சிக்கு காரணமானவர்களே இதிலுள்ளனர். எனது கட்சி சார்பில் இந்தகுழுவிலிருந்து நான் இராஜினமா செய்யவுள்ளேன். இப்படியானவர்கள் இருப்பார்கள் என நினைத்து பெயரை கொடுக்கவில்லை என்றார்.

14 பேரை உள்ளடக்கிய இந்த குழுவில் 9 பேர் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களாவர். விஜித ஹேரத் உள்ளிட்ட 5பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்களாவர்.

நாட்டின் நிதி வங்குரோத்துக்கு காரணத்தை ஆராய்ந்து அறிக்கையிடும் விசேட தெரிவுக்குழுவாக இந்த தெரிவுக்குழு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.