நான்கு குழந்தைகளுடன் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள தன் மனைவியை மீட்டுத் தருமாறு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கைராப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குலாம் ஹைதர் அவரதுமனைவி சீமா ஹைதர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். குலாம் ஹைதர் தற்போது சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சீமாஹைதர் பாகிஸ்தானில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
சீமா ஹைதர் மொபைலில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த கேம் வழியாக அவருக்கு டெல்லி கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்பவர் அறிமுகமானார். பின் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து அவருடன் சேர்ந்து வாழ்வதற்காக சீமா ஹைதர், தன்னுடைய 4 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நேபாளம் வழியாக கடந்த மே மாதம் 13-ம் தேதி இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக வந்தார். முன்னதாக சொந்த ஊரில் இருந்த தனது சொந்த நிலத்தை ரூ.12 லட்சத்துக்கு விற்றுள்ளார். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு இந்தியா வந்துள்ளார் சீமா ஹைதர்.
பிறகு அவர்கள் கிரேட்டர் நொய்டாவில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்தத் தகவல் அக்கம் பக்கத்தினர் மூலம் வெளியானதால் சீமா ஹைதர், சச்சின் மீனா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இருவரும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுரா பகுதியில் உள்ள வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை வந்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது, தற்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். விரைவில் சட்டப்பூர்வமாக இந்து முறைப்படி கங்கா ஸ்நானம் செய்து திருமணம் செய்து கொள்வோம் என்றனர்.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் வேலை செய்து வரும் குலாம் ஹைதர், தன் மனைவி சீமாவை பாகிஸ்தான் அனுப்பி வைக்கும்படி பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சீமா ஹைதர் கூறியதாவது. நான் இந்து மதத்துக்கு மாறிவிட்டேன். என்னுடைய பெயரையும் சீமா ஹைதர் என்பதை சீமா சச்சின் என்று பெயர் மாற்றிக் கொண்டுள்ளேன். சீமா என்பது முஸ்லிம், இந்து மதத்தில் பொது பெயராக உள்ளது. எனவே, அதை மட்டும் நான் மாற்றவில்லை. என்பிள்ளைகளுக்கும் ராஜ், பிரியங்கா,பாரி, முன்னி என பெயரிட்டுள்ளோம். கிரேட்டர் நொய்டாவுக்கு வந்த பிறகு மிக கவனமாக நான் உருது பேசுவதைத் தவிர்த்தேன்.
பெரும்பாலும் இந்தி சொற் களை பயன்படுத்தினேன். எனினும்அக்கம் பக்கத்தினர் கண்டுபிடித்துவிட்டனர். இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
எனது கணவர் குலாம் ஹைதர் தொலைபேசியில் என்னை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் நீண்ட காலமாக எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு சீமா சச்சின் கூறினார்.
சச்சின் கூறும்போது, ‘‘எங்களது கும்பத்தினர் சீமாவையும் அவரது குழந்தைகளையும் ஏற்றுக் கொண்டனர். உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் சீமாவுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று வேண்டுகிறேன். விரைவில் முறைப்படி திருமணம் செய்து கொள்வோம்’’ என்றார்.
சச்சின் குடும்பத்தார் கூறும் போது, ‘‘இந்து முறைப்படி திருமண சடங்குகளுடன் திருமணம் நடத்தி வைத்தோம்’’ என்று உறுதி அளித்தனர். அக்கம் பக்கத்தினரும் சச்சின் – சீமா திருமணத்துக்கு இப்போது ஆதரவு அளித்து வருகின்றனர்.