உக்ரைனுக்கு திரும்பிய 5 தளபதிகள் – துருக்கிக்கு ரஷ்யா கண்டனம்

87 0

உக்ரைன் – ரஷ்யா போர் முடிவடையும்வரை உக்ரைன் – துருக்கி இடையே கைதிகள் பரிமாற்றம் இருக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டுள்ளதாக ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை கீவ் வந்தடைந்தார். ஜெலன்ஸ்கியுடன் துருக்கி சிறையில் இருந்த உக்ரைன் ராணுவ தளபதிகள் 5 பேரும் நாடு திரும்பியுள்ளனர். இந்த தளபதிகளின் வருகைதான் ரஷ்யாவை கோபமடையச் செய்துள்ளது.

கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் போரில் மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியபோது அந்நகருக்கு தலைமை தாங்கிய உக்ரைன் ராணுவ தளபதிகள் சிலர் கடைசிவரை சிறப்பாக போராடினர். ரஷ்யாவின் மூன்று மாத முற்றுகையின் போது உக்ரைன் தளபதிகள் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையின் கீழ் சுரங்கங்கள் அமைத்தும், பதுங்குக் குழிகளில் தங்கி இருந்தும் ரஷ்யாவுடன் சண்டையிட்டனர். இந்த சூழலில்தான் அவர்களை கடந்த ஆண்டு மே மாதம் சரணடையுமாறு உக்ரைன் கேட்டுக் கொண்டது. அதன்படி தளபதிகளும் சரணடைந்தனர்.

தளபதிகள் விடுவிப்பு தொடர்பான மத்தியஸ்தத்தில் துருக்கி ஈடுபட்டது. போர் முடிவடையும் வரை தளபதிகள் துருக்கியில் இருக்க வேண்டும் என்ற மத்தியஸ்தம் விதிமுறைகளின் கீழ் தளபதிகளில் சிலரை கைதிகள் பரிமாற்றத்திற்கு ரஷ்யா ஒப்புக் கொண்டு செப்டம்பர் மாதம் விடுவித்தது. விடுவிக்கப்பட்டவர்கள் துருக்கி சிறையில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தனது துருக்கி பயணத்தில் சிறையில் இருந்த தளபதிகள் 5 பேரை ஜெலன்ஸ்கி நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறும்போது, “நாங்கள் துருக்கியிலிருந்து தாயகம் திரும்பி விட்டோம்.. நமது நாயகர்கள் நாட்டிற்கு திரும்பியுள்ளர். அவர்களது குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர்.” என்று தெரிவித்தார். இந்த நிலையில் கைதிகள் பரிமாற்ற விதிமுறையை துருக்கி மீறியதாகவும் இதுகுறித்து முதலில் எங்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.