சேலத்தில் கால்நடை மருத்துவத்தில் உலா வரும் போலி மருத்துவர்கள்

279 0

சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதால் அவை உயிரிழப்பதை தடுக்க கால்நடைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கால்நடை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அளவில் பால் உற்பத்தியில் சேலம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. சேலம் மாவட்டம் முழுவதும் 4.50 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், தனியார் பால் நிறுவனங்களும் பல லட்சம் லிட்டர் பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றன.

மாவட்டம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேலான மாடுகளை விவசாயிகள் வளர்த்து, பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட அரசு கால்நடை மருத்துவ மனைகள் உள்ளன. கால்நடை மருத்துவமனை மூலம் மாடுகளுக்கு தடுப்பூசி, சினை ஊசி, நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

கால்நடை மருத்துவமனைகளில் சினை ஊசி போடுவதற்காக பத்தாம் வகுப்பு முடித்தவர்களை தகுதியாக கொண்டு டிஎன்எல்டிஏ பணியாளர்கள் (சினை ஊசி போடுபவர்கள்) உள்ளனர். இவர்களுக்கு சினை ஊசி போடும் முறை குறித்து கால்நடை மருத்துவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் மாடுகளுக்கு சினை ஊசி மட்டுமே போட வேண்டும். தவிர, வேறு சிகிச்சைகள் செய்யக் கூடாது.

அதேபோல, கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக பணியாற்றுபவர்கள், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் மாடுகளுக்கு சிகிச்சை முறையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கிராம பகுதியில் மாடுகளுக்கு சகல விதமான நோய்களுக்குமான சிகிச்சையை ‘போலி மருத்துவர்கள்’ மேற்கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனை சேலம் மண்டல கால்நடைத் துறை இணை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து, உரிய முறையில் கள ஆய்வு செய்து, போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என கால்நடை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்களால் பல கால்நடைகள் மரணிக்கும் பரிதாபமும் நிகழ்வதாகவும், இதனை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் தலைவாசல், கெங்கவல்லி, ஆத்தூர், வாழப்பாடி, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், தம்மம்பட்டி, வீரகனூர் உள்பட மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கான போலி மருத்துவர்கள் உலாவி வருகின்றனர்.

அரசு கால்நடை மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள், தங்களை கால்நடை மருத்துவர்களாக விவசாயிகளிடம் கூறிக் கொண்டு, கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய், மடி நோய், பிரசவம் பார்த்தல், காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கின்றனர்.

முறையாக கால்நடை மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர்கள் சிகிச்சை பார்க்கும் போது, அளவுக்கு அதிகமாக மருந்தை மாடுகளுக்கு செலுத்தும் போது, பாலில் நச்சுத்தன்மை ஏற்பட்டு, அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதேபோல, மாடுகளுக்கு முறையற்ற சிகிச்சை அளிப்பதன் மூலம் பல இடங்களில் மாடுகள் இறக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.

எனவே, இது சம்பந்தமாக கால்நடைத் துறை அதிகாரிகள் உரிய விசாரணை செய்து, கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கும் ‘போலி’களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.