கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உட்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசு, பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று (ஜூலை 10) போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக அவரது தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து புறப்பட்டு, பல்லவன் விரைவு ரயிலில் நேற்று சென்னை எழும்பூர் வந்தனர். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் டெல்லி செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அனைவரும் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அங்கு அண்ணா நினைவிடம் முன்பு அமர்ந்து, கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், அவர்களை போலீஸார் கைது செய்து, அருகே உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு கொண்டு சென்றனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.