மலையக மக்கள் கடந்த 200 வருடங்களாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதற்காகவே முழு மூச்சாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இருப்பினும் இந்த பிரச்சினைகளுக்கு தனித்து செயல்பட முடியாது. அனைவரும் ஒரு அணியாக, ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தெனியாய பகுதியில் இடம்பெற்ற நடமாடும் மக்கள் சேவையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அஸ்வெசும திட்டத்தில் புறக்கணிப்பு, காணிப் பிரச்சினைகள், இனவாத புறக்கணிப்புகள், நலன்புரி கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு துன்பங்களை எமது மக்கள் அனுபவித்து வருகின்றனர். இவற்றையெல்லாம் வெற்றிகொள்ள நாம் ஒன்றுபட வேண்டும்.
குறிப்பாக அஸ்வெசும வேலைத்திட்டத்தில் உள்வாங்குவாதக் கூறி எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். தகுதியற்றவர்கள் இணைக்கப்பட்டு தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இறுதியில் புறக்கணிப்புகள் மாத்திரமே எமக்கு எஞ்சியுள்ளது. அஸ்வெசும திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் குறிப்பாக அதில் பிரிவினைவாதம் அல்லது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் எவ்வாறான தீர்மானங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி ஆலோசகருடன் கலந்துரையாடுவோம்.
இதேவேளை, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால் தினமும் கலந்துரையாடல்களை மாத்திரம் மேற்கொள்வதன் மூலம் தீர்வு கிடைக்காது. நாம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒரு அணியாக ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே தீர்வு கிடைக்கும். நாமே எமது மக்களுக்கு பாதுகாப்பு அரணாக செயற்பட வேண்டும். அந்த அடிப்படையிலேயே நாங்கள் முழு மூச்சாக போராடிக்கொண்டிருக்கிறோம்.
இதேவேளை எனது மக்களை பாதுகாக்க ஒரு முறைமையை பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். அதற்கான சந்தர்ப்பமொன்று தற்போது ஏற்பட்டுள்ளது. நான் அணுகியுள்ள இந்த முறைமை சிறப்பானது என கருதுகிறேன். இந்த முறைமையின் கீழ் எனது சமூகத்தை காப்பாற்றிக்கொள்வதோடு, எமது இருப்பை பாதுகாத்துக் கொள்ளவும் இது வழிவகுக்கும் என்றார்.