உமாமகேஸ்வரன் கடமைகளை பொறுப்பேற்பு

81 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடத்துக்கு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அ. உமா மகேஸ்வரன் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை (9) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வுபெற்ற  நிலையில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்குரிய அரச அதிபர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. இந்நிலையில்,  பதில் மாவட்ட செயலாளராக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த அ. உமா மகேஸ்வரன் கடந்த வாரம் அமைச்சரவையினால் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக அங்கீகாரம் பெற்ற நிலையில், இன்றைய தினம் காலை  முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்த அரச அதிபருக்கு பொன்னாடைகள் போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, அரசாங்க அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் உதவி பிரதேச செயலாளர்கள், சமூக நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.