உள்ளூராட்சி மன்றங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்க முடியாது

78 0

பதவிக் காலம் நிறைவடைந்துள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்கி பழைய தலைவர்களையும், உறுப்பினர்களையும் நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தோல்வியை மறைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணைக்கு எதிராக நீதிமன்ற்ததை நாடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பிரதேச சபை, மாநகர சபை மற்றும் நகர சபை தொடர்பில் தனிநபர் பிரேரணையொன்று பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த பிரேரணைக்கு எதிராக வழக்கு தொடர எதிர்பார்த்துள்ளோம். தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அப்பால் உள்ளுராட்சி மன்றங்களின் பதவி காலத்தை நீடிக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உரிய காரணங்களை முன்வைத்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரால் இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் நீடிக்க முடியும். அவ்வாறில்லை எனில் அவசரகால நிலைமையில் ஜனாதிபதியால் பதவி காலத்தை நீடிக்க முடியும். ஆனால் நாட்டில் தற்போது அவசரகால நிலைமை இல்லை என்பதால் ஜனாதிபதிக்கு எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் சகல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் மீண்டும் உள்ளுராட்சி சபைகள் ஸ்தாபிக்கப்படுவதால் தமக்கும் நன்மை என எண்ணக்கூடும். உண்மையில் அவ்வாறு செய்வதற்கு எந்தவொரு சட்ட ஏற்பாடுகளும் இல்லை. கிராம மட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன வாக்குகளை இழந்துள்ளதால், அக்கட்சியின் தோல்வியை மறைப்பதற்காகவே இவ்வாறானதொரு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.