“சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பதே எங்களது அரசியல். எனவே, மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் எமக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்‘ என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் கொட்டகலைக்கு வருகை தந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது.
கொட்டகலை ஆசிரியர் கலாசாலையை கேந்திரமாக கொண்டு பல்லைக்கழகத்தின் முதற்கட்ட தொகுதியினை நிறுவுவதற்கும், மேலும் நிர்வாக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செல்வதற்குமான இறுதிக்கட்ட கலந்துரையாடலாக இது அமையப்பெற்றது.
அத்துடன் பல்லைக்கழகத்தில் எந்தவிதமான பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.