டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல், செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்று தமிழக அரசு பரிந்துரைத்ததை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பினார். ஆனால், இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்துமாறு ஆளுநரிடம் தெரிவித்தார். இதனால், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக, முதல்வருக்கு ஆளுநர் மீண்டும் கடிதம் எழுதினார்.
இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குமாறும் தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஆளுநர் மாளிகை, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கு தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட விசாரணை அறிக்கை கிடைக்கவில்லை எனவும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்குக்கு ஒப்புதல் கேட்டு எந்தக் கோரிக்கையும் பெறப்படவில்லை என்றும் தெரிவித்தது. இதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர் எஸ்.ரகுபதி, அந்த கோப்புகளை ஆளுநர் மாளிகையில் உள்ள பிரிவு அதிகாரி கையெழுத்திட்டு வாங்கியதற்கான ஒப்புகை ஆவணங்களை வெளியிட்டார்.
இந்நிலையில், ஒரு வார பயணமாக ஆளுநர் ரவி நேற்று முன்தினம் டெல்லிக்குச் சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் சூழல், செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும், சில ஆலோசனைகளை ஆளுநருக்கு அமித் ஷா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி ஆகியோரை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.