உசிலம்பட்டி அருகே முற்கால பாண்டியர் கால சப்தமாதர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

73 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தில் முற்கால பாண்டியர் கால சப்தமாதர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தில் முற்கால பாண்டியர் கால சப்தமாதர் சிற்பத் தொகுதி கண்டறியப்பட்டுள்ளது. மதுரை வரலாற்று ஆர்வலர் அருண்சந்திரன் கள ஆய்வில் இச்சிற்ப தொகுதியை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் கூறியது: தமிழர்களின் தொன்மையான வழிபாடான சப்தமாதர் வழிபாடு தொன்று இன்றளவும் இருந்து வருகிறது. முற்கால பாண்டியர் கால சப்தமாதர் சிற்பங்கள் பொதுவாக குடைவரை கோயிலில் உள்ள பாறையில் புடைப்பு சிற்பமாகவே இருக்கும்.

இவற்றை திருப்பரங்குன்றம், குன்னத்தூர், திருக்காளக்குடி, திருக்கோகர்ணம் போன்ற பாண்டியர் கால குடைவரை கோயில்களில் காணலாம். ஆனால் அல்லிகுண்டம் கிராமத்தில் பெரிய கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டிருப்பது முக்கியமானதாக உள்ளது. சப்தமாதர்களில் மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாரகி, இந்திராணி, பிரம்மி, சாமுண்டி ஆகிய ஏழுபேர் அடங்குவர்.ஆனால் இங்கு சாமுண்டி, இந்திராணி, பிரம்மி, கௌமாரி ஆகிய 4 சிற்பங்களே உள்ளன. மீதமுள்ள 3 சிற்பங்களை கிராம மக்களின் துணையோடு கள ஆய்வு செய்துவருகிறேன். இந்த ஆய்வுக்கு பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் சொ.சாந்தலிங்கம், மைய ஆய்வாளர் ரா.உதயகுமார் ஆகியோர் உதவி புரிந்தனர் என்றார்.