செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீது ஜூலை 11, 12-ம் தேதிகளில் விசாரணை

76 0

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீது ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ள மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், அவருடைய நீதிமன்ற காவலை நீட்டிக்கவும் அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில், நீதிபதி ஜெ.நிஷாபானு, அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம் என்றும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். ஆனால் மற்றொரு நீதிபதியான டி.பரத சக்ரவர்த்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது சரியான நடைமுறைதான் என மாறுபட்ட தீர்ப்பளித்தார்.

அறிக்கைகள் தாக்கல்: இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கி்ல் இரு நீதிபதிகளுக்கிடையே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்தும், அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள காலகட்டத்தை நீதிமன்ற காவலாக கருத முடியுமா என்பது குறித்தும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும் முடிவு எடுப்பதில் முரண்பாடுகள் உள்ளதாக இரு தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மேகலா தரப்பில் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராக இருப்பதால் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டுமென மூத்த வழக்கறிஞரான என்.ஆர்.இளங்கோ கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து இந்த வழக்கை ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு மீண்டும் விசாரிக்க இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கு அன்றைய தினங்களில் விசாரிக்கப்படும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார். அதேபோல ஜூலை 12-ம் தேதியுடன் முடிவடையும் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, அமர்வு நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிடவும் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்