கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தினால் முத்திரையிடப்படும் போதைப்பொருள் வியாபாரிகளை சிறைச்சாலைகளில் பொது மக்களின் வரிப்பணத்தில் பராமரிக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள சட்டத்தின் மூலம் பொதைப்பொருள் வியாபாரத்தை நிறுத்த முடியாது. அதனால் சிங்கப்பூரில் இருக்கும் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
போதைப்பொருள் வியாபாரம் நாட்டுக்குள் பாரியளவில் இடம்பெறுகிறது. பாடசாலை கட்டமைப்பிலும் இது இடம்பெறுகிறது.
அதனால் விசேட வேலைத்திட்டம் மேற்கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் காரணமாக இன்று நாட்டுக்குள் கொலைகள் அதிகரித்துள்ளன. நுளம்புகொள்வது போன்று மனிதர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இது பாரிய பிரச்சினையாகும்.
மேலும் போதைப்பாெருள் வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு அவர்களை நீதிமன்றம் முத்திரைவைக்கும்போது, நாட்டு மக்களின் வரிப்பணத்திலேயே அவர்கள் சிறைச்சாலைகளில் பராமரிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதேபோன்று நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தை நிறுத்த முடியுமா என கேட்கிறேன்.
அத்துடன் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக ஏன் சிங்கப்பூர் சட்டத்தை கொண்டுவர முடியாது? எனவே போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருபவர்களை மக்களின் வரிப்பணத்தில் அவர்கள் சிறைச்சாலைகளில் பராமரிக்கப்படுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் இருக்கும் நாங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும். என்றார்.