தவறுகளை திருத்திக் கொண்டு,வெளிப்படைத் தன்மையுடன் செயற்படாமல் இருந்தால் பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற வானூர்திமூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தச்) சட்டமூலம் -இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த வேண்டுமாயின் உள்ளக மட்ட விமான சேவைகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.
உள்ளக விமான சேவைகளின் கட்டணம் அதிகளவில் காணப்படுகிறது.ஆகவே உள்ளக விமான சேவையை விரிவுப்படுத்தி சேவை வழங்கலை இலகுப்படுத்த வேண்டும்.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பெரும் பிரச்சினையாக காணப்படுகிறது.நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு இந்த விமான சேவை நிறுவனம் பெரும் பங்கு வகிக்கிறது.2022 ஆம் ஆண்டு மாத்திரம் இந்த நிறுவனம் 163 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
எமிரேட் விமான சேவை நிறுவனத்துடன் ஒன்றிணைந்து சேவையை விரிவுப்படுத்த ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் ஆரம்ப காலத்தில தீர்மானிக்கப்பட்டது.
ராஜபக்ஷர்களின் அரசாங்கம் எமிரேட் நிறுவன தலைவருடன் முரண்பட்டுக் கொண்டதால் எமிரேட் நிறுவனம் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவன சேவையுடனான விரிவுப்படுத்தல் சேவையில் இருந்து விலகியது.இதனை தொடர்ந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நட்டமடைந்தது.
இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதை ஏற்றுக்கொள்கிறோம்.ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
அத்துடன் மறுசீரமைப்பு பணிகள் வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெற வேண்டும். மறுசீரமைப்பு பணிகள் வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெறுகிறதா என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது. ஜனாதிபதி ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார்,நகைச்சுவையாக உரையாற்றுகிறார் என்ற காரணத்தால் வெளிநாட்டு முதலீடுகள் நாட்டை வந்தடையாது.நாட்டில் சட்டவாட்சி கோட்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை சிறந்த முறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.
நாடு ஏன் வங்குரோத்து அடைந்தது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான நபர் நிதி வங்குரோத்து நிலை தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்,எவ்வாறு வெளிநாட்டு மற்றும் தேசிய முதலீடுகள் கிடைக்கப்பெறும்.
பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.மக்களின் தேர்தல் உரிமை முடக்கப்பட்டு கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீள் ஸ்தாபிக்க பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலைகளில் எவ்வாறு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும் என்றார்.