கடல் மார்க்க போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த இந்தியா மற்றும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு

74 0

போதைப் பொருள் வர்த்தகத்தை முற்றாக கட்டுப்படுத்துவதற்கும் கடல் மார்க்கமான போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கும்  அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதற்காக இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் முழுமையான ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் தொடர்ந்து தெரிவிக்கையில்

போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் விநியோகங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில்  விசேட பாதுகாப்புச் சபை கூட்டங்கள் பல நடத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சர்வதேச கடல் பரப்பின் நிலைமைகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சம்பந்தமாக பாதுகாப்பு சபை கூட்டத்தில் விரிவாக ஆராயப்படுகின்றன. தேவையானால் எதிர்க்கட்சித் தலைவர் அங்கிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கையை தடுப்பதற்கு நாம் தனித்து அன்றி இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிலைமைகள் தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம்.

எமது நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும்  இதனால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டு  வருகின்றன. கடற்பரப்பில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இந்தியாவும் எம்முடன் விடயங்களை பகிர்ந்து வருகின்றது.

எமது பாதுகாப்புப் படையினர் அது தொடர்பில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

உலகின் இரண்டாவது பாரிய வர்த்தகமாக தற்போது போதைப்பொருள்  வியாபாரம் இருந்துவருகிறது. அதனால் அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பெரும் அர்ப்பணிப்புடன் எமது பாதுகாப்புப் படை செயல்படுகிறது.

அத்துடன் போதைப் பொருள் வர்த்தகம் பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

போதைப் பொருள் தடுப்பு தொடர்பில் எமது சட்டங்களை மேலும் கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.