இவ்வருட இறுதியில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை – அமைச்சர் சுசில்

143 0

2023ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இந்த வருட இறுதியில் நடத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு மிக விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹரினி அமரசூரிய கேட்ட கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. அது நிறைவு பெற்றதுடன் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பிக்கப்படும்.

அத்துடன் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையும் இந்த வருட இறுதிக்குள்  நடத்தப்படுவதுடன் டிசம்பர் மாதம் இடம்பெற இருக்கும் சாதாரண தர பரீட்சை 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த பரீட்சை ஏற்பாட்டு நடவடிக்கை பரீட்சை திணைக்களத்தினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுவதுடன் சாதாரண பரீட்சை உட்பட வேறு பரீட்சாத்திகளின் தகவல்களை வெளி தரப்பினருக்கு பெற்றுக்கொடுப்பதை நிறுத்துமாறு அனைத்து மாகாண மற்றும் வலய காரியாலயங்களுக்கு அறிவிக்கின்றேன்.

மேலும் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கும் வேலைத்திட்டங்களை திட்டமிடுவதற்கு வேறு வெளி தரப்பினரின் தலையீடுகள் இல்லாமல் கல்வி அமைச்சின் கீழ் செயற்டும் நிறுவனங்களுடன்  இணைந்து கல்வி அமைச்சுக்கு பாடசாலை கட்டமைப்புக்குள்ளேயே சுயாதீனமாக மேற்கொள்ள முடியும் என்றார்.