இலஞ்சம் வழங்குவதும் குற்றம் : வாங்குவதும் குற்றம்

67 0

இலஞ்ச ஊழல் ஒழிப்பு  ஆணைக்குழுவால் மாத்திரம் ஊழலை ஒழிக்க முடியாது. நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இலஞ்சம் வாங்குவதும் குற்றம்,  இலஞ்சம் வழங்குவதும் குற்றம் என்பதை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். சட்டம் இயற்றிய பின்னர் ஓரிரு இரவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

சிறந்த மாற்றத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும், சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கடந்த காலங்களில் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள்.

குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களின் உளவியல் நிலை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த புதிய சட்டமூலத்துக்கு அமைய சாட்சியாளர்கள் மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

விசேட சட்ட நிபுணர்களின் வழிநடத்தலுக்கு அமையவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தலைமையிலான குழுவினால் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் ஒழிப்பு சாசனத்துக்கு அமைவாகவே ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என விமர்சித்துக் கொண்டிருப்பதை காட்டிலும் சட்டமூலத்தை இயற்றுவது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். ஒரு சட்டமூலத்தை முழுமையாக தயாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு இருந்தால் ஒருபோதும் சட்டத்தை இயற்ற முடியாது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை கட்டம் கட்டமாக மாற்றியமைக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு, தற்போது நிலைமை கட்டம் கட்டமாக மாற்றமடைந்துள்ளது சிறந்த நிலையாகும்.

ஹொங்கொங் நாட்டில் உள்ள ஊழல் எதிர்ப்பு சட்டத்துக்கு இணையாக ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்தார். சட்டத்தை இயற்றிக் கொண்டால் மாத்திரம்  எதிர்பார்க்கும் இலக்கை அடைய முடியாது. இயற்றப்படும் சட்டங்கள் முறையாக செயற்படுத்தப்பட வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்தி  பலருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசேட நீதிமன்றங்கள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இறுதியில் எந்த குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. ஆளும் தரப்பினர் எதிர்தரப்பினரை திருடன் என்பதும், எதிர் தரப்பினர் ஆளும் தரப்பினரை திருடன் என்று விமர்சிப்பதும் வழமையாகியுள்ளது. நாட்டு மக்கள் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் விமர்சிக்கிறார்கள்.

இலங்கையின் ஊழல் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகிறது. ஆகவே விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்காமல் சட்டமியற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊழல் எதிர்ப்பு சட்டத்தை இயற்றியதன் பின்னர் ஊழல் ஒழிப்புக்கான பௌதீக மற்றும் மனித வளங்கள் வழங்கப்பட வேண்டும்.

தகவல் வழங்குநர் என்று குறிப்பிட்டுக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள் உள்ளார்கள் ஆகவே தகவல் வழங்குநர் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். உறுதியான தகவல்களுடன் ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களை தகவல் வழங்குநர்கள் முன்வைக்க வேண்டும். சகலரும் திருடன் என்று குறிப்பிடுவது உண்மையான திருடனின் பாதுகாப்பு கவசமாக காணப்படுகிறது. ஆகவே திருடர்களை பாதுகாக்கும் சூழலை மக்கள் ஏற்படுத்த கூடாது.

நீதிமன்ற செயற்பாடுகளையும், ஆணைக்குழுக்களையும் அரசியலாக்காமல் இருந்தால் சகல சட்டங்களையும் சிறந்த முறையில் செயற்படுத்த முடியும். அரசியல் நோக்கத்துக்காக பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும், அரசியல் அழுத்தத்தால் குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்வது இரண்டும் தவறானதே. இவ்விரு முறைமையும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் மாத்திரம் ஊழலை ஒழிக்க முடியாது. நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  இலஞ்சம் வாங்குவதும் குற்றம்,   இலஞ்சம் வழங்குவதும் குற்றம் என்பதை மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். சட்டம் இயற்றிய பின்னர் ஓரிரு இரவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சிறந்த மாற்றத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.