பொருளாதார படுகொலையாளர்களால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்!

67 0

பொருளாதாரப் படுகொலையாளிகள் சுதந்திரமாக வாழும் போது நடுத்தர அப்பாவி மக்கள் பொருளாதார பாதிப்புக்கு நட்டஈடு செலுத்துகிறார்கள். இலங்கையில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கூட ஊழல் குற்றச்சாட்டுடன் சிறை செல்வதுமில்லை, தண்டனை அனுபவிப்பதுமில்லை.

சட்டத்துக்கு சிறு மீன்களான நடுத்தர மக்களே அகபடுகிறார்கள், பெரிய மீன்களான அரசியல்வாதிகள் விடுபடுகிறார்கள்.இந்நிலைமை மாற்றமடைந்தால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடையலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார படுகொலையாளர்களினால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார படுகொலையாளிகள் சுதந்திரமாக இருக்கும் நிலையில் அப்பாவி மக்கள் பொருளாதார பாதிப்புக்கு நட்டஈடு செலுத்துகிறார்கள்.அத்தியாவசிய பொருள் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆனால் பொருளாதார குற்றவாளிகள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பொருளாதார படுகொலையாளிகளுக்கு சட்டத்தின் ஊடாக தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் குறிப்பிடுகிறார்கள்.ஊழல் ஒழிப்புக்கு புதிய சட்டத்தை இயற்ற அவதானம் செலுத்தப்படுகிறது.

நடைமுறையில் உள்ள சட்டம் ஏன் பலவீனமடைந்தது என்பது குறித்து ஆராய வேண்டும்.நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு சிறுமீன்களான அடிமட்டவர்களே அகப்படுகிறார்கள்.பெரிய மீன்களான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஆதரவு உள்ளவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.ஆகவே நடைமுறையில் உள்ள சட்டம் பலவீனமானது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

600 மில்லியன் சொத்து சேர்ப்பு விவகாரத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினரை ஆணைக்குழுவுக்கு முன்னிலையாகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்த போது  அரசியல் வரபிரசாதங்களை கொண்டு அவர் தப்பித்து விட்டார்.பிணைமுறி மோசடியாளர் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி,அவரை மோசடியாளர் என்று குறிப்பிட்டவர்கள் தற்போது அமைச்சர்.புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் ஊடாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை அழைத்து வர முடியுமா ,முடியாது.

இலஞ்ச ஊழல் மோசடியுடன் தொடர்புடைய பலர் பாராளுமன்றத்தில் உள்ளார்கள். அண்மையில் கூட தங்கம் கடத்தல் விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு மறுநாள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கிறார்.இவ்வாறான தன்மையே காணப்படுகிறது.ஆகவே இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த குறைப்பாடுகளும்,பலவீனமும் கிடையாது.அரசியல் காரணிகளுக்காகவே சட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறது.

மல்வானை சொகுசு வீடு உட்பட பல முறைகேடான சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் அரசியல் அழுத்தத்துடன் இரத்து செய்யப்பட்டது.சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசியல் அழுத்தம் செல்வாக்கு செலுத்துகிறது,ஆகவே இயற்றப்பட்ட சட்டங்களை தவறு என்று குறிப்பிடுவது முறையற்றது.மோசடியான அரசியல் கலாசாரம் உயர் சட்டங்களையும் மலினப்படுத்துகிறது.

பாக்கிஸ்தான்,பங்களாதேஸ் ,இந்தியா ஆகிய நாடுகளில் பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள் ஊழல் மோசடி குற்றத்தால் சிறை சென்றுள்ளார்கள்,செல்கிறார்கள்.ஆனால் இலங்கையில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கூட சிறை செல்வதும் இல்லை,தண்டனை அனுபவிப்பதும் இல்லை.

பொருளாதார படுகொலையாளிகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இயற்கை அழிவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

ஆனால் தற்போதைய பொருளாதாரப் பாதிப்பு ஊழல்வாதிகளால்  உருவாக்கப்பட்டது.ஊழல்வாதி பிறிதொரு ஊழல்வாதியை காட்டிக் கொடுப்பது இல்லை.ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஊழல் ஒழிப்பு தொடர்பில் அவதானம் செலுத்த முடியாது.நடைமுறைக்கு சாத்தியமான வகையில் சட்டமியற்ற ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.