மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் தம்மைக் கண்கொண்டு பார்க்குமாறு கோரி மாபெரும் அமைதி கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை இன்று மேற்கொண்டனர்.
இதன்போது, பட்டதாரி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளது போன்ற உருவபொம்மை கட்டித் தூக்கப்பட்டு அதனை பட்டதாரிகள் தூக்கியவாறு கவனயீர்ப்பு ஊர்வலத்தினை முன்னெடுத்தனர்.
21 நாட்களாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் நடாத்திவரும் நிலையில் இன்று குறித்த அமைதி கவன ஈர்ப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் பிரதான பஸ்நிலைய வீதியை அடைந்து அங்கிருந்து புதுப்பாலம் ஊடாக தாண்டவன்வெளி சந்தியை அடைந்து அதன் ஊடாக திருமலை மட்டக்களப்பு வீதியூடாக காந்தி பூங்காவினை ஊர்வலம் வந்தடைந்தது.
சுமார் ஒரு கிலோமீற்றருக்கு அதிகமான தூரத்தினைக்கொண்டதாக பட்டதாரிகளின் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசேட போக்குவரத்து ஓழுங்குகளை மேற்கொண்டிருந்தனர்.
–மத்திய மாகாண அரசாங்கமே எம்மீது கரிசனை செலுத்து, சுமந்திரனுக்கு முடியுமென்றால் மட்டக்களப்பு அரசியல்வாதிகளுக்கு பிரதமரை சந்திக்க ஏன் முடியவில்லை, கிழக்கு முதலமைச்சர் அறிக்கை அரசியலை விடுத்து தமக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையெடுக்கவேண்டும்—
போன்ற கோரிக்கைகளை பட்டதாரிகள் இதன்போது விடுத்தனர்.