தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளின் தியாகங்கள் நிறைந்திருக்கின்றன.
தரை, கடல்,ஆகாயம் என கரும்புலிகளின் தாக்குதல்கள் களத்தேவைக்கு ஏற்ப நடைபெற்றன. விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் செயற்பட்டார்கள். தம் உயிர்களை அர்பணித்து எதிரிக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தினார்கள்.
“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்” என
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் கூறியிருக்கின்றார்.
வீரச்சாவடையும் கரும்புலிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். நினைவுநாட்களில் அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும், கெளரவமும் வழங்கப்பட்டு கல்லறையிலோ, நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர்.
ஆனால்,மறைமுகக் கரும்புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியைச் சேர்ந்தவர்கள் .
போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணித்தவர்கள். தற்கொடைத் தாக்குதலைச் செய்த பின்னர். இவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டாது.
எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வராது.
கல்லறைகளோ, நினைவுக்கற்களோ இவர்களுக்காக இருக்காது. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறமாட்டாது. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போன உண்மைகள் இவர்கள். இவர்களே ‘மறைமுகக் கரும்புலிகள்’.
வேர்கள் வெளியினில் தெரிவதில்லை – சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை – கரும்
புலிகளின் கல்லறை வெளியில் இல்லை.
என ஆசான கவிஞன் புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார்.
அனைத்து கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் இன்றைய நாள் (யூலை மாதம் 05ம் நாள்) நினைவு வணக்கம் கொள்வோம்.
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்காலில் பல கரும்புலிகள் வீரகாவியமானார் என அறியமுடிகிறது. அவர்களின் விபரங்கள் எதுவும் தெரியாது . கந்தக காற்றுடன் கலந்து போனார்கள்.
கரும்புலிகள் என நாங்கள்
மகிழ்வோடு செல்வோம்
கண்டதும் சிங்களம்
கலங்கிடும் வெல்வோம்!
கடலினில் சிங்கள
படகினை உடைப்போம்
தரையினில் எதிரியின்
பாசறை முடிப்போம்..
சாவினை தோள்மீது
நாங்கள் சுமப்போம்
சாவுக்கும் அஞ்சாமல்
சாவுக்குள் வாழ்வோம்
தமிழரின் சாவுகள்
வரலாறு படைக்கும்
தமிழீழ தாய் அவள்
விலங்குகள் உடைக்கும்.
தமிழர் தம் உணர்வோடு
எம் உயிர் கலக்கும்.