மழை விட்டாலும் தூவானம் விட்டபாடில்லை என்பது போன்று இஸ்ரேல் இராணுவத்துக்கும் பலஸ்தீன போராளிகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன. இந்நிலையில், பலஸ்தீன பகுதியில் இருந்து ஒரு சிறு தாக்குதல் நடந்தாலே போதும் இஸ்ரேல் இராணுவம் பாரிய அளவில் தாக்குதலை ஆரம்பிக்க தயாராகிவிடும். அந்த வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக்கரை நகரமான ஜெனின் மீது மிகப்பெரிய இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேலிய படை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் ஜூன் 19, அன்று மேற்குக் கரையில் உள்ள ஜெனின் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 5 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதால் பெரும் மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.
இதேவேளை , இஸ்லாமிய ஜிஹாத்துடன் தொடர்புடைய பாலஸ்தீன போராளிக் குழுவானது ஜெனின் முகாம் மற்றும் ஜெனின் பிரிகேட்டின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டுச் செயற்பாட்டுக் கட்டளை மையமாக செயல்படுவதாகவும் ,மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முன்னும் பின்னும் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கூடும் இடமாக செயற்பட்டது என்றும் அண்மைய மாதங்களில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட , தேடப்படும் நபர்களுக்கு இங்கு தங்குமிடம் வழங்கப்பட்டது ” என்றும் இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது.
அது மாத்திரமின்றி, ஜெனின் முகாம் மற்றும் மசூதிக்குள் வெடிமருந்துகள், ஆயுதங்கள் என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், வீதிகளில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டி வந்தது.
இந்தப் பின்னணியில் அண்மைய இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 100 பேர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
REUTERS
இதேவேளை , இஸ்ரேல் பாதுகாப்புப் படை விடுத்துள்ள ஓர் அறிக்கையில், பலஸ்தீனர்களின் “பயங்கரவாத உள்கட்டமைப்பை” தாக்கி, ஜெனின் நகரம் மற்றும் ஜெனின் முகாம் பகுதியில் விரிவான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்களைப் பயன்படுத்தி சுமார் 10 வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், பாலஸ்தீன இராணுவ மையம் மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தயாரிக்கும் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் கடும் தாக்குதல் தொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அப்பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர், அதேநேரத்தில் காயமடைந்த பாலஸ்தீனர்கள் ஜெனின் அரசு வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான பாலஸ்தீன குடும்பங்கள் அழிவின் மத்தியில் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளன. அகதிகள் முகாமில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன என்று ஜெனின் துணை மேயர் தெரிவித்தார்.
ஜெனின் குடியிருப்பாளர் ஒருவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு கூறுகையில், எங்களுக்கு குடியிருப்புகளை விட்டு வெளியேற இரண்டு மணிநேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. நாங்கள் முகாமில் இருந்து மக்களுடன் வெளியே ஓடினோம். பல குழந்தைகள் பயந்து அழுதுகொண்டே தங்கள் பெற்றோருடன் நடந்தார்கள். அவர்களுக்கு, என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பலரைக் காணவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் அலைந்து திரிந்தனர் என்று கூறினார்.
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் பதின்ம வயதினர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, இஸ்ரேல் தலைமை செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எட்டு பயங்கரவாதிகள் ஜெனினில் கொல்லப்பட்டதாகவும், தங்களுக்குத் தெரிந்தவரை இறந்தவர்கள் போராளிகள் அல்ல என்றும் கூறினார். காயமடைந்தவர்களில் பொதுமக்களும் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும், இந்த நடவடிக்கை “பயங்கரவாதிகளை” குறிவைப்பதை மட்டுமே குறிக்கும் என்று கூறிய அவர் “இது ஜெனின் மீதான படையெடுப்போ, பாலஸ்தீன அதிகாரத்துக்கு எதிரானதோ அல்லது இது அப்பாவி, பலஸ்தீனர்களுக்கு எதிரானதோ அல்ல. இந்த முகாமில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்றார்.
Photo ; Ronaldo Schemidt AFP via Getty Images
எனினும் இதனை பாலஸ்தீனர்கள் கடுமையாக கண்டித்துள்ளார். பலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இந்தப் பாரிய அளவிலான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையானது “புதிய போர்க்குற்றம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் “நமது பாலஸ்தீன மக்கள் இதனை உணராத வரையில் அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் ஒருபோதும் உருவாகாது. ஜெனின் நகரத்திலும் அதன் முகாமிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் செய்வது நமது பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிரான புதிய போர்க் குற்றமாகும் என்றும் அவர் சாடினார் .
எகிப்தும் இஸ்ரேலிய ஊடுருவலைக் கண்டித்துள்ளதுடன் அதை “ஆக்கிரமிப்பு” என்று குற்றம் சாட்டியுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஜெனினில் உள்ள பயங்கரவாதக் கோட்டைகளுக்கு எதிராக இராணுவம் செயல்பட்டது என்று கூறியுள்ளார்.
ஜெனின் குடியிருப்பாளரான 35 வயதான லினா அமோரி, ஊடகம் ஒன்றுக்கு கூறுகையில், மசூதிகள் வெளியேற்றப்படுவதை அறிவிக்கும் வரை எமக்கு எதுவும் தெரியாது . “நாங்கள் அனைவரும் ஜன்னல்கள் இல்லாத ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒளிந்திருந்தோம். 1 முதல் 9 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகள் மற்றும் பெண்கள் என நாங்கள் காலை 5 மணி முதல், மின்சாரம் மாற்று வசதிகள் இன்றி இருந்தோம் . இது ஒரு பயங்கரமான நாள் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், குழந்தைகள் நாள் முழுவதும் அழுது கொண்டிருந்தார்கள், அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் செய்யக்கூடிய ஒரே விடயம், வெடிச்சத்தங்கள் மற்றும் புல்டோசர்களின் இரைச்சல் வெளியே கேட்கும் போது ஒன்றாக பிரார்த்தனை செய்வதுதான். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க நாங்கள் முதலில் வெளியே சென்றபோது அது முற்றிலும் வேறுபட்ட சூழலாக காணப்பட்டது. எல்லா வீதிகளும் உழப்பட்டது போலிருந்தது , தண்ணீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் உடைக்கப்பட்டிருந்தன. மின்கம்பங்கள் கீழே விழுந்து காணப்பட்டன . கார்கள் ஒன்றன் மீது ஒன்றாகக் குவிக்கப்பட்டிருந்தன. நிலநடுக்கத்துடன் புயல் ஒன்று எங்களை கடந்து சென்றது போல் உணர்ந்தோம் என்று அந்த பயங்கரமான சூழலை விபரித்தார்.
மற்றுமொரு குடியிருப்பாளர் கூறுகையில், படையினர் அதிகாலையில் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தனர், அவர்கள் எங்களை ஒரு அறையிலும், ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை ஒரு அறையிலும், மற்றொரு அறையில் என் தந்தை, சகோதரர்கள் மற்றும் மாமாக்களையும் பூட்டினார்கள். பின்னர் முகாமைத் தாக்குவதற்கு அவர்கள் எங்கள் வீட்டை ஸ்னைப்பர்களின் தாக்குதலுக்கான இடமாக பயன்படுத்திக் கொண்டனர். நாங்கள் அறையில் அமர்ந்திருந்தவாறு வெளியே வெடிக்கும் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தோம் என்றார்.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறுகையில், அண்மைய மாதங்களில், ஜெனின் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது. பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தினர். இஸ்ரேலிய குடிமக்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றனர். நான் இங்கு பேசுகையில், எங்கள் துருப்புக்கள் பயங்கரவாதிகளுடன் துணிச்சலுடனும் போராடுகின்றனர் . அதேவேளை, பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க தேவையான அனைத்தையும் செய்கிறார்கள் என்றார்.
Reuters
‘பயங்கரமான நாள்’
மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான ஐ.நா.வின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் டோர் வென்னஸ்லேண்ட், ஜெனினில் உள்ள சூழ்நிலையை உடனடியாக தணிக்கவும், மனிதாபிமான அணுகலை உறுதிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் நேரடி தொடர்பை பேணி வருவதாக கூறியுள்ளார்.
பல மாதங்களாக தொடர்ந்து வந்த பதற்றத்திற்குப் பின்னர் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் மிகவும் நிலையற்ற மற்றும் கணிக்க முடியாத சூழ்நிலையை மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது. பொதுமக்கள் மக்கள் பாதுகாக்கப்படுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வென்னஸ்லேண்ட் கூறினார்.
ஜெனினில் உள்ள பாலஸ்தீன செஞ்சிலுவை சங்க இயக்குனர் மஹ்மூத் அல்-சாதி, முகாமுக்குள் செஞ்சிலுவை குழுக்கள் செயல்படுவதை படை நடவடிக்கைகள் தடுக்கின்றன என்று கூறியுள்ளார் . எல்லைகளற்ற வைத்தியர்கள் (MSF) என்ற சர்வதேச மருத்துவ உதவி அமைப்பும் இஸ்ரேலியப் படைகள் ஜெனினில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் , உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணி முதல் MSF ஊழியர்கள் நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இராணுவ நடவடிக்கை உயிரிழப்புகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் சுகாதார கட்டமைப்புகளையும் சீர்குலைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
தாக்குதலுக்கு அழைப்பு
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பு மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமில் உள்ள போராளிகளை “கிடைக்கும் அனைத்து வழிகளிலும்” இஸ்ரேலை தாக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் , பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பானது ஜெனினில் “படுகொலையை” நிறுத்துவதில் ” தன் கடமையைச் செய்யும்” என்றும் கூறியுள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல், டெல் அவிவ் நகருக்கு வெளியே உள்ள பினே பிராக்கில் இஸ்ரேலிய இளைஞன் ஒருவரை பாலஸ்தீனிய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்தனர். “ஜெனினில் நடந்த சம்பவங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அந்த நபரை குத்தியதாக” அந்த இளைஞர் கூறியதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இஸ்திரேலின் “ஜெனின் மீதான ஆக்கிரமிப்பு அதன் இலக்குகளை அடையாது என்று அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனின் மீதான எதிரி ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாக சாத்தியமான அனைத்து வழிகளிலும் எதிரியை எதிர்கொள்வோம் என்று போராளி குழு அதன் அதிகாரப்பூர்வ டெலிகிராமில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், திங்கள் இரவு விடிந்ததும், 500க்கும் மேற்பட்ட பலஸ்தீன குடும்பங்கள் அகதிகள் முகாமை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டன என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இவ்வாறான, சூழ்நிலையில் இந்த இராணுவ நடவடிக்கை அடுத்த அல்லது இரண்டு நாட்களுக்குள் முடிவடையும் என்று இஸ்ரேல் இராணுவப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார். அதேவேளை, இது நாங்கள் செயல்படும் கடைசி நேரமாக இருக்காது என்று கூறிய அவர், புத்திசாலித்தனம் இருக்கும்போது நாங்கள் செயல்படுகிறோம். பயங்கரவாதம் நடப்பதற்கு முன்பு நாங்கள் அதற்கு எதிராக செயல்படுகிறோம் என்றார்.
ஆர்.பி.என்