ஆஸ்திரியா நாட்டின் மிகவும் பிரபலமான பத்திரிகையும், உலகின் மிகப் பழமையான செய்தித்தாளுமான ‘வெய்னர் ஜெய்துங்’ (Wiener Zeitung ) இனி அச்சேறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 320 ஆண்டு கால வரலாறு கொண்ட பத்திரிகையின் அச்சுப் பதிப்பின் மூடுவிழா அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையின் கடைசி அச்சுப் பிரதியில் வாசகர்கள் விவரம் அறிந்து கொள்ளும்விதமாக ஒரு விவரக் குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. ஜூன் 29, 2023 அன்று வெளியான பத்திரிகையில் அந்தச் சுருள் இணைக்கப்பட்டிருந்தது. அதில் இனி ‘வெய்னர் ஜெய்துங்’ இணையவழியில் மட்டுமே வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 8, 1703 முதல் ‘வெய்னர் ஜெய்துங்’ பத்திரிகை செயல்பட்டு வருகிறது. அப்போது ஆஸ்திரியாவில் ஹாப்ஸ்பர்க் அரசாட்சி நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஜூலை 7ஆம் தேதியுடன் ‘வெய்னர் ஜெய்துங்’ அச்சு அலுவலகம் மூடப்படுகிறது.
1703-ல் இந்தப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது ’Wiennerisches Diarium’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பல அரசாட்சிகள், அதிபர்களைக் கண்ட இந்தப் பத்திரிகையின் கடைசிப் பிரதியின் முகப்புப் பக்கச் செய்தியில் “320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 10 பேரரசர்கள், 2 குடியாட்சிகள், ஒரு செய்தித்தாள்” என்று பெருமிதக் குறிப்பு இடம்பெற்றிருந்தது. இது வாசகர்களை உணர்வுபூர்வமாக நெகிழச் செய்தது.
ஒரே ஒரு சட்டம்’ ஓய்ந்துபோன வரலாறு: ‘வெய்னர் ஜெய்துங்’ பத்திரிகை ஆஸ்திரிய அரசுக்கு சொந்தமானது என்றாலும்கூட அதன் ஆசிரியக் குழு முற்றிலும் சுதந்திரமாக இயங்கியது. இருப்பினும் அண்மையில் ஆஸ்திரிய அரசு கொண்டுவந்த ஒரு சட்டத்தால் இப்பத்திரிகைக்கும் பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்பட்டது. இதனால் 63 பேர் கொண்ட ஆசிரியர் குழுவில் இருந்து பலரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடைசியாக 20 பேர் மட்டுமே ஆசிரியர் குழுவில் இருந்தனர். சுவாரஸ்யமான நடையில் உள்ளூர், வெளிநாட்டுச் செய்திகள், கலாசார, வணிகச் செய்திகளை வழங்கி ‘வெய்னர் ஜெய்துங்’ பத்திரிகை பெயர் பெற்றது.
ஆஸ்திரிய மக்களின் மனம் கவர்ந்த இந்தப் பத்திரிகை இனி இணையதளமாக செயல்படவுள்ள நிலையில் மாதம் ஒரு பிரதி மட்டும் அச்சிடுவது பற்றி நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
அர்னால்டின் நேர்காணல்: கடைசிப் பிரதிக்காக நடிகரும், அரசியல்வாதியுமான அர்னால்டு ஸ்வார்ஸ்நெகரை நேர்காணல் செய்திருந்தது. அர்னால்டு ஆஸ்திரியா நாட்டில் பிறந்து ஹாலிவுட்டில் தடம் பதித்து உலகப் புகழ் பெற்ற நடிகர். அதனால், அவருடைய நேர்காணலை பிரத்யேகமாக வெளியிட்டிருந்தது. அந்தப் பேட்டியின் முடிவில் ஸ்வார்ஸ்நெகரின் ’டெர்மினேட்டர்’ (TERMINATOR) கதாபாத்திரம் சொல்வதைப் போல் எங்களால் “I’ll be back” – ‘மீண்டும் வருவோம்’ என்று எங்களால் சொல்ல முடியாது என்று ஆசிரியர் குழு தனது வேதனையைப் பதிவு செய்திருந்தது.
சமீபத்தில்தான் உலகப் புகழ்பெற்ற NatGeo இதழ் தனது அச்சுப் பிரதியை நிறுத்துவதாக அறிவித்தது. டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்தால் NatGeo அச்சு மூடுவிழா காண்பதாக நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 3 நூற்றாண்டுகள் கண்ட பத்திரிகையும் மூடுவிழா காண்பது அச்சு ஊடகங்களுக்கு வேதனையான செய்தியாக விடிந்துள்ளது.