புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
என்.ஐ.ஏ எனப்படும் “இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரமைப்பு”, இந்தியா பவுண்டேசன், ஹரியானா சுவர்ண உற்சவ குழு ஆகியன இணைந்து “பயங்கரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு 2017” என்ற தொனிப்பொருளில் குறித்த நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பயங்கரவாதம் என்ற தொனிப்பொருளில், இந்த கருத்தரங்கு நாளை ஆரம்பமாகி, எதிர்வரும் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கும் இந்தக் கருத்தரங்கில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணொலி மூலம் உரையாற்றவுள்ளார்.
அதனை தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் பல்வேறு தொனிப்பொருள்களில் விவாதங்களும், கருத்தரங்குகளும் இடம்பெறவுள்ளன.
இந்த மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 30 நாடுகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கின்றன. பல்வேறு நாடுகளின் அரசியல் பிரமுகர்கள், பாதுகாப்பு நிபுணர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.