நுவரெலியா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நஷ்ட ஈடு

74 0

நுவரெலியா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஒவ்வாமை ஏற்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளதோடு, இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் தற்போது அந்த நிறுவனத்திடமிருந்து மருந்துகள் முற்றாக பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் எனக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அவர்களுக்கு மயக்க மருந்து வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய குறித்த மயக்க மருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுவர்களுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த முதலாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அதிலுள்ள தகவல்களை இப்போது ஊடகங்களுக்கு வெளியிட முடியாது. இறுதி அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் முழுமையான தகவல்கள் வழங்கப்படும். எவ்வாறிருப்பினும் குறித்த மருந்து உட்பட சந்தேகத்துக்குரிய ஏனைய சில மருந்துகளின் பாவனைகளும் இடைநிறுத்தப்பட்டு, அவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவின் மருந்துகள் இவற்றில் உள்ளடங்குகின்றன.

பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் பதிவான இரு மரணங்களிலும், சுகாதார தரப்பில் ஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருந்தால், அந்த பொறுப்பிலிருந்து எம்மால் விலக முடியாது. மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு விலைமனு கோரப்படும். அவ்வாறு விலைமனு கோரப்படும்போது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் முன்வராத சந்தர்ப்பத்திலேயே, பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஊடாக மருந்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாறாக நாம் திட்டமிட்டு பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஊடாக மருந்துகளை இறக்குமதி செய்வதில்லை. நுவரெலியா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில் 13 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளனர். எனினும் எஞ்சிய இருவர் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் அதிகமாகும்.

இவர்களுக்கு வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்ட சொட்டு மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த மருந்து இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டதாகும். இந்நிறுவனம் இலங்கைக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு மருந்துகளை இறக்குமதி செய்கிறது. இலங்கைக்கு மாத்திரமின்றி 53 நாடுகளுக்கு இந்நிறுவனம் மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. அவ்வாறிருந்தும் இவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நஷ்ட ஈடு வழங்கப்படும்.

நாட்டிலுள்ள பெரும்பாலான வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதால் உள்நாட்டில் கனிசமானளவு வைத்தியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்காகவே வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60இலிருந்து 63ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு முதுகலை பட்டதாரிகளை வைத்தியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.