மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து சனிக்கிழமை (1) மாலை 85 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது வாகனமொன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 85 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 35 வயதுடைய மன்னார் – பேசாலை மற்றும் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதன்போது, மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், வாகனங்கள் ஆகியன மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.