சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ‘ஒரு குடும்பம், 3 குழந்தைகள்’ திட்டத்தை சீன அரசு அறிமுகம் செய்திருக்கிறது.
இதன் மூலம் சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசும், மாகாண அரசுகளும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. சீன அரசின் அறிவுறுத்தலின்படி தனியார் நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் டிரிப் டாட் காம் குரூப் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜேம்ஸ் லியாங் கூறியதாவது:
எங்கள் நிறுவன ஊழியர்களின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் ரூ.1.13 லட்சத்தை ஊக்கத் தொகையாக வழங்குவோம்.
குழந்தை பிறந்தது முதல் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு குழந்தைக்கு ஊக்கத் தொகையை அளிப்போம். ஒட்டுமொத்தமாக ஒரு குழந்தைக்கு ரூ.5.65 லட்சத்தை ஊக்கத் தொகையாக வழங்குவோம். ஒரு ஊழியர் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அத்தனை குழந்தைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஊக்கத்தொகையை வழங்குவோம். இவ்வாறு ஜேம்ஸ் லியாங் தெரிவித்தார்.