மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மேகேதாட்டு அணை திட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு, கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்திட்ட இரண்டாம் கட்டம் உள்ளிட்டபல்வேறு குடிநீர்த் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள சிவக்குமார், அந்த திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழக அரசு, மேகேதாட்டு அணை திட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது, இரு மாநில மக்களிடையே பகைமையையும், வெறுப்பையும் மூட்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் இரண்டாவது கட்டம், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்கப்படும் தண்ணீரைக் கொண்டுதான் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் தலையிட கர்நாடகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது.
மேகேதாட்டு அணைக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை டி.கே.சிவக்குமார் வலியுறுத்துவதுதான் சட்டவிரோதமானது. காவிரி ஆறு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறு என்பதால், கடைமடைப் பாசன மாநிலமான தமிழகத்தின் அனுமதி இருந்தால் மட்டும்தான் கர்நாடக அரசால் அணை கட்ட முடியும். இதை மத்திய அரசு பலமுறை உறுதி செய்துள்ளது.
அதனால், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசு நினைத்துக்கூட பார்க்க முடியாது. இது கர்நாடக மாநில அரசுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். மேகேதாட்டு அணை விவகாரத்தில் விதிகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழகத்துக்குதான் சாதகமாக உள்ளன. ஆனால், அதை மதிக்காக கர்நாடக அரசு, இரு மாநில மக்களுக்கு இடையே பகைமை நெருப்பை மூட்டி, குளிர்காயத் துடிக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.