யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நிர்வாக பொறுப்புக்கள் யாழ். நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மருதடி விநாயகர் தேவஸ்தான தர்மகர்த்தா சபை தலைவர் தம்பிராசா தர்பாகரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கையளிப்பு நிகழ்வானது இன்று (01.07.2023) ஆலய முன்றலில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சண்டிலிப்பாய் மற்றும் பிரதேச செயலாளர் யசோதரா உதயகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது.ஆலயத்தின் நிர்வாக சபை தேர்தல் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தர்மகர்த்தா சபைக்கான தேர்தல் (25.06.2023) அன்று நடைபெற்றிருந்தது. அதன் அடிப்படையில் யாழ்.மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான புதிய தர்மகத்தா சபை தலைவராக தம்பிராசா தர்பாகரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதற்கமைய யாழ்.மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தான தர்மகர்த்தா சபை தலைவர் தம்பிராசா தர்பாகரனிடம் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதரா உதயகுமார் இணைந்து ஆலய பொறுப்புக் கடமைகளை கையளித்துள்ளனர்.
இதன்போது யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் யசோதரா உதயகுமார், நிர்வாக உறுப்பினர்கள், சண்டிலிப்பாய் பிரதேசசெயல அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்துள்ளனர்.