தேசிய கடன் மறுசீரமைப்பால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஜீவன் ஏற்றுக்கொள்வாரா ?

145 0

ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றை தமது இறுதி கால சேமிப்பாக கருதும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொள்வாரா? என கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார் .

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (01)  இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம்  நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியுள்ளது. தேசிய கடன் ஒருபோதும் மறுசீரமைக்கப்படமாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் கடந்த காலங்களில் குறிப்பிட்டார்.

தேசிய கடன் மறுசீரமைக்கப்படும் என சர்வதேசத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டு மக்களை தவறாக வழிநடத்தியமை முற்றிலும் தவறானது.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் உறுப்பினர்கள் தமக்கு ஏற்பட போகும் பாதிப்பு தொடர்பில் குரல் கொடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள்.

அரசாங்க நிதி தொடர்பான குழு கூட்டத்தில் தேசிய கடன் மறுசீரமைப்புக்குள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியன உள்வாங்கப்படும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள்.

ஆனால் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் சுய விருப்பத்துடன் கடன் மறுசீரமைப்பு விவகாரத்துக்கு இணக்கம் தெரிவித்தார்கள் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. அரசாங்கத்தின் கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசிய கடன் மறுசீரமைப்பால் உழைக்கும் மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.மலையக தோட்ட தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை தமது இறுதி சேமிப்பாக கருதுகிறார்கள்.இவர்களின் சேமிப்புக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு நிச்சயம் பாதிப்பை  ஏற்படுத்தும் இதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான்  இடமளிப்பாரா ? என  கேள்வி எழுப்பினார்.