மன்னார், உயிலங்குளம் பகுதியில் ஒரு குற்றச்செயல் தொடர்பாக பொலிஸார் சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்காக வீடு தேடி சென்றபோது அந்த வீட்டிலிருந்த ஆண்கள், பெண்கள் இணைந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் மாவட்ட பதில் நீதவான் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) உத்தரவிட்டார்.
மன்னார் உயிலங்குளம் மதுபானசாலைக்கு அருகில் கடந்த சனிக்கிழமை (24) மாலை சிலர் கலவரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சிலர் உயிலங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, உயிலங்குளம் பொலிஸார் கலவரம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை செய்தபோது, கலவரத்தில் ஈடுபட்டவர்களை அங்கு நின்றவர்கள் பொலிஸாருக்கு இனங்காட்டியுள்ளனர்.
அதன் அடிப்படையில் சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கு அவர்களின் வீட்டுக்கு சென்ற பொலிஸாரை வீட்டில் இருந்தவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பொலிஸார் காயங்களுக்குள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக 5 ஆண்களும் 5 பெண்களும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (25) மாலை மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.வினோதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கைதான 10 பேரையும் நேற்று வெள்ளிக்கிழமை 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் கட்டளை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் அந்த 10 சந்தேக நபர்களும் மீண்டும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) மன்னார் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.