செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அதிகாரம் உங்களுக்கு இல்லை – ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

82 0

 ‘‘செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’’ என்று ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அன்று இரவே அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய5 பக்க கடிதத்துக்கு முதல்வர் 6 பக்கத்தில் பதில் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு அதன்பின் அந்த உத்தரவைநிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளீர்கள். இதில் இருந்து முதல்வரிடமோ, அமைச்சரவையிடமோ எந்தஉதவியோ, ஆலோசனையோ நீங்கள் கோரவில்லை. அப்படியிருக்கும் போது, நீங்கள் கடும் வார்த்தைகளுடன் எழுதிய கடிதத்தில்,அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்டுள்ளதாகக் கூறியுள் ளீர்கள்.

இதன் மூலம், ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் முன், நீங்கள் எந்த சட்ட ஆலோசனையையும் பெறவில்லை என்பது தெரிகிறது. இந்த விஷயத்தில், மத்திய உள்துறை அமைச்சர் தலையிட்டு உங்களிடம் சட்ட ஆலோசனை பெறும்படி தெரிவித்துள்ளதில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தை குறைவாக மதிப்பிட்டு நீங்கள் அவசரப்பட்டு செயல்பட்டிருப்பது தெளிவாகிறது.

எனது அமைச்சரவை மற்றும் எங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. அதுதான் எங்கள் அசைக்க முடியாத சொத்து.அரசியலமைப்பு சட்டத்தின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநர், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கையாளும்போது கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சீர்குலைவு என்றுஆதாரமற்ற வகையில் அச்சுறுத்துவதாக நடந்து கொள்ளக் கூடாது.

நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவரைத் தான் அமைச்சர் பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யமுடியும். ஆனால், செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை அவரை கைது செய்திருக்கிறதே தவிர, குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யவில்லை.

குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் அமைச்சர்களின் பதவி தொடர்பாக, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ‘‘குற்ற வழக்கினை எதிர்கொள்பவர் அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா? நீக்கப்பட வேண்டுமா என்பதை பிரதமர் அல்லது முதல்வர் முடிவு செய்ய வேண்டிய விஷயம்’’ என்று தெரிவித்துள்ளது.

எனவே, விசாரணை அமைப்பு ஒருவர் மீது வழக்கு தொடர்ந்தாலே அவர் அமைச்சராக தொடர முடியாது என கூற முடியாது. செந்தில் பாலாஜி தொடர்பாக கடந்த ஜூன்16-ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்ததை, அவரை தகுதிநீக்கம் செய்வதற்கான உத்தரவாக ஏற்க முடி யாது.

வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக கூறப்பட்ட சம்பவத்தில் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் குற்றச்சாட்டு கூறுவது, நீதி நிர்வாகத்தில் தலையிடுவது போன்றதாகும். இதில் செந்தில்பாலாஜியின் தலையீடு இருப்பதாக கூறுவதும் ஆதாரமற்றது.

அதேநேரம் அதிமுக முன்னாள்அமைச்சர்கள் மீதான குற்றங்களுக்கு விசாரணையை அனுமதிக்க வைத்த கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன. குற்ற வழக்கில் அனுமதி கேட்டு சிபிஐ வைத்த கோரிக்கை மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது ஒரு தலைபட்ச செயல்பாட்டை வெளிகாட்டுகிறது. அத்துடன் உங்கள் நடவடிக்கையின் பின் உள்ள உள்நோக்கத்தையும் தெளிவாக்குகிறது.

நான் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறியுள்ளீர்கள். அரசு எப்போதும் உங்களுக்கும், உங்கள் அலுவலகத்துக்கும் உரிய மரியாதை அளித்து வருகிறது. தமிழ் காலாச்சாரம் அளித்த மரியாதையை நாங்கள் எப்போதும் வழங்குகிறோம்.

இதனால், நீங்கள் எங்களுக்கு அளிக்கும் சட்ட விரோத உத்தரவுகளுக்கு பணிவதாக நினைக்கக்கூடாது, ஒரு அமைச்சரை நியமிப்பது, நீக்குவதில் ஆளுநர் முதல்வரின் ஆலோசனைப்படிதான் செயல்பட முடியும்.

எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ நீக்க வேண்டும் என்றுஉத்தரவிட உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது முதல்வரின் உரிமை. எனவே, என் ஆலோசனையின்றி செந்தில்பாலாஜியை நீக்கும் உங்களது தகவல் சட்டப்படி செல்லாது. புறக்கணிக்கத்தக்கது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.