பொதுமக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பக்கூடியவரை பொலிஸ்மா அதிபராக நியமியுங்கள்

75 0

பொலிஸார் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக வீழ்ச்சிகண்டிருக்கும் நிலையில், அதனை மீளக்கட்டியெழுப்பக்கூடிய ஒருவரை பொலிஸ்மா அதிபராக நியமிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பொலிஸ்மா அதிபர் பதவி கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதியுடன் வெற்றிடமாகியிருக்கின்றது. பொலிஸ் திணைக்களத்தின் தலைவர் பொலிஸ்மா அதிபராவார்.

நாட்டில் நீதியை நிலைநாட்டுவதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும் பொலிஸார் மீதான பொதுமக்களின் நம்பிக்கை இன்றியமையாதது என்பதே எமது நிலைப்பாடாகும். எனவே அப்பதவிக்கு மிகப்பொருத்தமான நபர் நியமிக்கப்படவேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

அண்மையகாலங்களில் பொலிஸார் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்கமுடிகின்றது. போதியளவு சுயாதீனத்தன்மையின்மை, அரசியல்மயமாக்கப்படல், பொலிஸ்காவலின்கீழ் இடம்பெறும் வன்முறைகள், பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள், தொழில்சார்தன்மை உரியவாறு பேணப்படாமை என்பன பொலிஸார்மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பதற்கான காரணங்களாக அமைந்திருப்பதாக நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.

அதேபோன்று பொலிஸ்மா அதிபர் பதவிக்குப் பொருத்தமற்ற நபர்கள் நியமிக்கப்படுவதன் விளைவாக ஏற்படக்கூடிய மிகமோசமான பின்விளைவுகளுக்கு உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் மிகத்தெளிவான உதாரணமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு முன்னதாக இடம்பெறும்  பெயர்ப்பரிந்துரைகள் மற்றும் அனுமதி வழங்கல் ஆகிய செயன்முறைகளின்போது அவற்றை அரசியலமைப்புக்கான 41 பி அல்லது 41 சி சரத்துக்களின் பிரகாரம் அரசியலமைப்புப்பேரவையே தீர்மானிக்கவேண்டும்.

மேலும் அடுத்து பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படக்கூடிய நபர், இதுவரையான காலமும் பொலிஸில் கறைபடியாத சேவையாற்றிய நபராக இருப்பதுடன் பொலிஸார் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பக்கூடியவராகவும் இருக்கவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.