ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்காது தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன.
எனவே தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள தேசிய மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மத்திய வங்கி ஆளுனர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் உள்நாட்டு கடன் மறுசீரமைக்கப்பட மாட்டாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்து வந்தனர்.
ஆனால் தற்போது தேசிய கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று , அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் என்னுமில்லாதவாறு முதன்முறையாக இதற்காக ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
உண்மையில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை கிடையாது. இதன் மூலம் கட்சிகளுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.
எவ்வாறிருப்பினும் தேசிய கடன் மறுசீரமைப்பு எனக் கூறி ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்கப்பட்டுள்ளமையை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.
ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்காமல் தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு பல வழிகள் உள்ளன.
சனிக்கிழமை இந்த யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே அதிலுள்ள விடயங்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். சர்வதேச நாணய நிதியம் இதனைக் கோரவுமில்லை என்றார்.