பாராளுமன்ற வரவு – செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் சான்றுரைப்படுத்தப்பட்டது

82 0
பாராளுமன்றத்தில் அண்மையில்  விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தில் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன செவ்வாய்க்கிழமை (27) கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

பொது நிதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்துக்கு சுயாதீனமான, பாரபட்சமற்ற பொருளாதார மற்றும் நிதிப் பகுப்பாய்வு, வருமானம் மற்றும் செலவினங்கள் பற்றிய பார்வையுடன் பொது நிதிப் பொறுப்புகளை நிறைவேற்ற உதவும் நோக்கத்துடனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கு உதவுவதை நோக்காகக் கொண்டும் பாராளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகம்  நிறுவப்பட்டுள்ளது.

அத்துடன் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திலும் சபாநாயகர் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.

இதற்கமைய இந்த இரண்டு சட்டமூலங்களும் 2023 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டம்,2023ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமாக அமுல்படுத்தப்படும்.