கனடா மற்றும் ஓமானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடி செய்த 5 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவிற்கு மாணவர் விசா வழங்குவதாக கூறி பண மோசடி செய்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கொழும்பு நிதி குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து தேடுதல் உத்தரவைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரிகள் கடவத்தையில் விசா நடைமுறைக்கு போலி ஆவணங்களை வழங்கும் வர்த்தகத்தை மேற்கொண்டு வந்த கட்டிடமொன்றை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது 3 கணனிகள், 3 மடிக்கணினிகள், 4 அச்சு இயந்திரங்கள், ஸ்கேனர் இயந்திரம், பல நிதி அறிக்கைகள், கடவுச்சீட்டுகள், போலி ஆவணங்கள், உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 1 ,187,130 ரூபா பணம் என பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரும், வத்தளை, ராகம மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்த 47, 45, 31, 28 மற்றும் 23 வயதுடைய ஐந்து பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
வெளிநாட்டு விசாக்களை நாடும் நபர்களுக்கான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் சொத்து தொடர்பிலான அறிக்கைகள் உள்ளிட்ட போலி ஆவணங்களை இந்தக் குழுவினர் உருவாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கொழும்பு நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, முறையான அனுமதிப்பத்திரமின்றி ஓமானில் வேலை வாய்ப்புபெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நேற்று முன்தினம் ஹெட்டியாராச்சி, மாகொல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமானில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடம் இருந்து 390,000 ரூபாவை பெற்றுக் கொண்டு வேலை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கமைவாக சந்தேகநபர் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக பணியகத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், சந்தேக நபர் புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கு ஜூலை 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.