சீனாவின் பொருளாதாரப் பிரச்சினைகளை விமர்சித்த பிரபல ஊடகவியலாளர் ஒருவர் சீன சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வூ ஸியாவோபோ எனும் ஊடகவியலாளருக்கே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது
சம்பந்தப்பட்ட சட்டங்கள் விதிகமுறைகளை மீறியதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன சமூக ஊடகமான வெய்போ தெரிவித்துள்ளது.
வெய்போ ஆனது டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளமாகும். வெய்போவில் வூ ஸியாவோபோவை 47 லட்சம் பேர் பின் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
3 பாவனையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வெய்போ தெரிவித்துள்ளது.
வூ ஸியாவோபோவின் பெயரை வெய்போ நேரடியாக குறிப்பிடவில்லை. எனினும் அவர்களில் ஒருவரின் பெயர் ‘வூ’ வில் ஆரம்பித்து ‘போ’ வில் முடிவடைவதாக தெரிவித்துள்ளது.
இணையத்தளமொன்றில் ஸியாவோபோ அண்மையில் எழுதிய கட்டுரைகளில் சீனாவின் பொருளாதாரப் பிரச்சினைகளை 1930 களின் பொருளாதாரப் பெருமந்த நிலையுடன் ஒப்பிட்ட அவர், பிறப்பு வீத வீழ்ச்சி மற்றும் இளையோர்களின் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆகியன தொடர்பாக விமர்சித்திருந்தார்.