சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் விளையாட்டு வீர, வீராங்கனைகள் போட்டிகள் நிறைவடைந்ததன் பின்னர் நாடு திரும்பாமல் இருப்பதை குறைக்கும் வகையில் விதிகள் கடுமையாக்கப்படும் என்றும் இதற்காக முன்னர் அறவிடப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா பிணைப் பத்திரம் 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வீர, வீராங்கனைகள் 100 பேரும், 55 அதிகாரிகளும் பங்குபற்ற உள்ளனர்.
இதில் சில விளையாட்டு வீர, வீராங்கனைகள் பதக்கம் வெல்வதற்குரிய வாய்ப்பு உள்ளது. நிதி நெருக்கடி காரணமாக விளையாட்டு வீர, வீராங்கனைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த எண்ணியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள 55 அதிகாரிகளின் விபரக்கோவை சரிபார்க்கப்பட்டு, அவர்களின் தகுதி மற்றும் அவர்களது பங்கேற்பு அவசியமனதா எனவும் ஆராயப்படும்.
சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்காக வெளிநாடு செல்லும் வீர வீராங்கனைகள் சிலர் நாடு திரும்பாத போக்கு அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் எமது விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு வீசா பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் தேசிய விளையாட்டு சபைத் தலைவர் தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பங்கேற்கின்ற விபரம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் ஊடகச் சந்திப்பு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றிருந்தபோதே இவ்வாறு அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது