கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்த அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் முன்னாள் மீன்பிடி பிரதியமைச்சர் சரத் குணரத்ன உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவர்களுககு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
நீர்கொழும்பு களப்பின் அபிவிருத்திக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணத்தை மகிந்தவின் இறுதித் தேர்தல் பிரசாரத்திற்கு செலவிட்டதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்த தகவல் தெரியவந்ததுடன் ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தியிருந்தது.
இந்த விசாரணைகளின் பின்னர், சட்டமா அதிபர் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.