இன்று (26) அமுலுக்கு வரும் வகையில் 60 வகை மருந்துகளின் விலைகளை 16% ஆல் குறைத்து சுகாதார அமைச்சர் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
எந்தவொரு மருந்து உற்பத்தியாளர், இறக்குமதியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட விலையில் மட்டுமே உரிய மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பெரசிட்டமோல், அமொக்சலின், தைரோக்ஸின் மற்றும் கிளிபிசைட் உள்ளிட்ட 60 வகை அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், கடந்த காலத்தில் ஏற்பட்ட மருந்துகளின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமாயின் குறித்த மருந்துகளின் விலைகளை மேலும் குறைக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.