கூட்டமைப்பின் கூட்டத்தை ஏற்பாடு செய்த இராணுவம்..! யாருக்கு அவசரம்? கஜேந்திரன் கேள்வி

279 0

கூட்டமைப்பின் கூட்டம் நேற்றைய தினம் இடம்பெறுவதற்கு முன்னர் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை இராணுவ சீருடையிலிருந்தவர்கள் மேற்கொண்டமையை ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது.

போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவம், அதிரடிப்படை ஆகியோர்கள் இவ்வாறான கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு முன்னின்று செயற்படுகிறார்கள் எனில், யாருக்கு இவ்வாறான கூட்டம் அவசரமாகவுள்ளது?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கான காரணத்தை எம்மனைவராலும் புரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிறபகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட தமிழர்களின் தலைவர்கள் என்று சொல்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலுள்ளவர்கள் கடுமையான நிபந்தனைகளுடன் ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் என நேற்றைய தினம் கூடித் தீர்மானித்திருப்பது அவர்கள் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக இலங்கைக்குக் கால அவகாசம் வழங்குவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதே அர்த்தம்.

இலங்கை அரசாங்கத்தின் கைகளில் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற தீர்மானத்தை அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்குவதன் ஊடாக மாத்திரமே அமுல்படுத்த முடியும்.

இல்லையெனில் அதனை அமுல்படுத்த முடியாது. ஆகவே, அமுல்படுத்த வேண்டும் என இவர்கள் கோருவது அரசாங்கத்திற்குக் கால அவகாசம் கொடுங்கள் என்ற தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக எடுத்து அறிவித்திருக்கிறார்கள் என்பதே பொருளாகும்.

நாட்டினுடைய ஜனாதிபதியும், பிரதமரும் ஒரு பொழுதும் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று கூறியிருக்கின்ற நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவிதமான நீதி விசாரணைகளோ அதற்கான முன்னெடுப்புக்களோ,

முயற்சிகளோ மேற்கொள்ளப்படாததொரு நிலையில், மாறாகக் குமாரபுரம் படுகொலைக் குற்றவாளிகளும், ரவிராஜ் படுகொலைக் குற்றவாளிகளும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டிருக்கின்ற சூழலில், இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கான முழுமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழலில்,

உள்ளக விசாரணை ஒருபோதும் சாத்தியமில்லை என்பது மிகவும் நன்றாகத் தெரிந்திருக்கின்ற சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான முடிவை எடுத்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறான முடிவானது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பதும், தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரைப் பாதுகாப்பதும் ,அவற்றிற்கும் மேலாக இராணுவத்தினரை யுத்தத்தில் ஈடுபடுத்தித் தமிழ்மக்களுக்கெதிரான மோசமான இனப்படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகள்,

மனித குலத்திற்கெதிரான குற்றங்களை நேரடியாகத் தலைமை தாங்கிச் செயற்படுத்திய மகிந்த ராஜபக் ஷவையும், கோத்தபாய ராஜபக் ஷவையும் பாதுகாப்பதற்கானதொரு முயற்சியாகத் தான் சம்பந்தன், சுமந்திரனின் நேற்றைய கூட்ட அறிவிப்பானது அமைந்திருக்கின்றது.

இந்த இரண்டு பிரதான போர்க் குற்றவாளிகளையும் தப்பிக்க வைப்பதுடன் , பாதுகாக்கின்ற செயற்பாடாகவும் தான் இவ்வாறான முடிவை அவர்கள் கங்கணம் கட்டிஎடுத்திருக்கிறார்கள்.

மகிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட போர்க் குற்றவாளிகள் மற்றும் இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் தமிழ்மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு வாக்களித்தமைக்கான பிரதான காரணமாகும்.

ஆனால், நேற்றைய தினம் அவர்கள் கூடி எடுத்திருக்கின்ற முடிவானது தமிழ்மக்களின் நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியுள்ளது. ஒரு போதும் ஐ. நா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படப் போவதில்லை.

இது சுமந்திரனுக்கும் நன்றாகத் தீர்மானம் நிறைவேறுவதை விரும்பவுமில்லை. கடுமையான கண்காணிப்பு என்ற சொல்லைச் சுமந்திரன் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கான காரணம் எங்கள் மக்களை ஏமாற்றுவதற்கானதொரு பசப்பு வார்த்தை மட்டுமே.

எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறைகள் தவறிப் போகுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும் கூட்டமைப்பினர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தத் தலைவர்களுக்கு ஒத்துழைத்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இந்தத் துரோகத்தனத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ்மக்களுக்கு நன்மை தராத இந்தக் காலநீடிப்பு அல்லது தீர்மானத்தை அமுல்படுத்தல் போன்ற ஏமாற்று நாடகங்களுக்கு எதிராகத் துணிந்து நின்று தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுதற்குரியது.

அத்துடன் அவருடன் இணைந்த வகையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியினரும் கால நீடிப்பை வழங்குவதை எதிர்த்துப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களுடைய துணிச்சலான முடிவை நாங்கள் வரவேற்கிறோம். பாராட்டுகின்றோம்.

தமிழ்மக்களின் தலைவர்களாகவுள்ள தாம் தமிழ்மக்களின் விருப்பப் படி ஒரு கூட்டத்தை ஜனநாயக முறையில் கூட்டி இந்தத் தீர்மானத்தை எடுத்திருப்பதானதொரு தோற்றப்பாட்டைச் சுமந்திரனும், சம்பந்தனும் காட்டுவதற்கு முற்படுகிறார்கள்.

ஆனால், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா எழுத்துமூலமாக ஒரு விடயத்தை வெளிப்படுத்தியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், இதுவே அவர்களின் நிலைப்பாடாகவுள்ளது எனவும் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

இவ்வாறானதொரு சூழலில் ஏற்கனவே சுமந்திரன் ஜெனீவாவிற்குச் சென்று கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனத் தன் சார்பில் பரிந்துரைகள் செய்து விட்டு இங்கு ஒரு பொய் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்.

அதன் பின்னர் கிழக்கு எழுக தமிழ் பேரணி ஊடாக ஏற்பட்ட அழுத்தங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கால அவகாசம் வழங்கக் கூடாது எனக் கடிதத்தை அனுப்புகின்றதொரு நிலைமையை உருவாக்கியது.

அதனுடைய எதிரொலியாகவே நேற்றைய தினம் கூட்டமைப்பினர் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர்.

மகிந்த ராஜபக் ஷவும் ஒரு காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் தலைமையாகச் செயற்பட்டார். அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் தான் தமிழ்மக்களை அழிக்கும் முடிவை எடுத்தது.

அதுமாத்திரமல்லாமல் தென்னிலங்கை மக்களைக் கூடப் பாதிக்கும் வகையில் தீர்மானங்களை நிறைவேற்றிச் செயற்பட்டது. இதன் காரணமாகத் தான் கடந்த-2015 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக் ஷவுக்கெதிராக மைத்திரிபால சிறிசேன களமிறங்க வேண்டி ஏற்பட்டது.

ஆகவே, மகிந்தவைப் போன்று தங்களுடைய அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சர்வாதிகாரமான முறையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் பலவீனங்களைக் கைகளில் வைத்துக் கொண்டு மிரட்டி அவர்களைப் பணியவைத்து, தங்களின் நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் கொண்டு செல்லக் கூடிய துரோகத்தனமான செயற்பாட்டைச் சுமந்திரன் செய்து முடித்துள்ளார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.