கோவில் திருவிழாவில் பலியிட்ட எருமை கிடா தலைமீது விளக்கேற்றி வினோத வழிபாடு

86 0

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் அருகே உள்ள ஏ.புதூர் சுப்புநாயுடு பாளையம் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நேற்று நடந்தது. காலை 10 மணி அளவில் சிரசு ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது கெங்கையம்மனுக்கு எருமைக்கிடா பலி கொடுக்கப்பட்டது. அதேபோல் எருமையின் முன்னங்கால்கள் வெட்டி கோவில் வாசப்படிகளிலும், பின்பகுதி கால்கள் வெட்டி கோவில் பின்புறத்திலும் வைக்கப்பட்டன. மேலும் வெட்டப்பட்ட எருமை கிடா தலையை கோவில் முன்பு வைத்து அதன் தலைமீது விளக்கேற்றி வைத்து, கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர்.

இதை தொடர்ந்து கெங்கை அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- கெங்கையம்மன் சிரசு (தலை) உடல் மீது பொருத்தப்படுவதை, சிரசு ஏற்றம் என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு தலை உடலுடன் சேரும்போது அம்மனுக்கு அதீத சக்தி மற்றும் உயிர் வரும் என முன்னோர் காலத்தில் இருந்து நம்பப்படுகிறது.

மேலும் ஆக்ரோஷமான அம்மன் என்பதால், கெங்கை அம்மனின் கோபத்தை தணிக்க சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. கிராம மக்கள் நோய் நொடியின்றி செழிப்புடன் வாழ முதல் பலியாக எருமைக்கிடா பலி கொடுப்பது வழக்கம்.

அதன்படி பலி கொடுக்கப்பட்ட எருமை கிடா உடல் பாகங்கள் கோவிலை சுற்றி வைக்கப்படுகிறது. மேலும் மழை பொழிய வேண்டி பலியிடப்பட்ட எருமைக்கடா தலை மீது விளக்கேற்றி வைத்தால் மழை பெய்யும் என்று நம்பப்படுகிறது. இதனை ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்றனர்.