இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது சிதம்பரம் போலீசில் தீட்சிதர்கள் புகார் அளித்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையின் மீது ஏறி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு அனுமதி இல்லை என வைக்கப்பட்டிருந்த பதாதைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்து தன்னை மிரட்டியதாக தீட்சிதர்கள் மீது சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியிடம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா புகார் அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:- இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையரின் உத்தரவுப் படி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்பு பணிக்காக கடந்த 24-ந்தேதி சென்றேன். அப்போது ஜூன் 24, 25, 26 மற்றும் 27-ந்தேதிகளில் கனக சபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற பதாதையை பொது தீட்சிதர்களால் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்ததை கண்டேன். நான் அந்த பதாதையை அகற்ற கோரிய போது தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.
இதனை தொடர்ந்து வருவாய் துறை, போலீசாருக்கு புகார் தெரிவித்து அவர்களின் உதவியுடன் பதாதையை அகற்ற முயன்ற போது என்னை பணி செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் என்னை பொது தீட்சிதர்களின் செயலர் மற்றும் இதர தீட்சிதர்கள் மிரட்டும் தோணியில் பேசினார்கள். எனவே எனது பணியை செய்ய விடாமல் இடையூறாக இருந்த பொது தீட்சிதர்களின் செயலர் மற்றும் இதர தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதாதைகளை அகற்றியும், அரசாணைப்படி பொதுமக்கள் மீண்டும் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இது போல் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவராம தீட்சிதர் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 24 முதல் 4 நாட்களுக்கு கனகசபையில் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என தற்காலிக அறிவிப்பு பதாதை வைக்கப்பட்டது.
இது குறித்து தர்சன் தீட்சிதர் மற்றும் ஜெயஷீலா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தாசில்தார், போலீசார் எங்களிடம் விசாரித்த போது உரிய முறையில் விளக்கம் அளித்தோம். ஆனால் கோவில் பூஜை விதிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலரது உதவியாளர் அறிவிப்பு பதாதையில் இருந்த வாசகங்களை தன்னிச்சையாக அழித்தார். இது தொடர்பாக அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.