ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் கோத்தபாய!

256 0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசத்திற்காக படையினரை தூண்டி அரச அதிகாரத்தை கைப்பற்றும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்துள்ள தகவலுக்கு அமைய அரச புலனாய்வு பிரிவுகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய ராஜபக்ச தலைமையில் இயங்கும் வியத்மக என்ற அமைப்பு நடத்திய மாநாட்டில் உரையாற்றிய சிலர் வெளியிட்ட கருத்துக்கள் இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அரச பாதுகாப்பு பிரிவுகளின் சில உறுப்பினர்கள் மேற்கொண்டதாக கூறப்படும் அரசியல் மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல்களை அடிப்படையாக கொண்ட கொலை குற்றச்சாட்டுக்கள் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே பல விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கொலைகளுடன் உயர் படை அதிகாரிகள், படையினர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

விசாரணைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் மூலம் நடந்த சம்பவங்களை உறுதிப்படுத்தும் பல சாட்சியங்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

இதனடிப்படையில் ஏற்படப் போகும் நிலைமையை கவனத்தில் கொண்டு அதற்கு முன்னர் முப்படைகளில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கையில் இறங்கும் வகையில் படையினரை தூண்டும் பிரசார முயற்சிகள் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வியத்மக அண்மையில் நடத்திய மாநாட்டின் மூலமாக இதற்கான பெரிய தூண்டுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக மாநாட்டில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை இராணுவத்தை தூண்டி விடும் வகையில் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ராஜபக்சவினர் தமது ஆட்சிக்காலத்தில் நாட்டில் இன மோதல்களை ஏற்படுத்த பொதுபல சேனா, தவ்ஹித் ஜமாத் போன்ற அமைப்புகளுக்கு அனுசரணை வழங்கியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

தற்போது வியத்மக,யுதுகம சங்கவாத கவய போன்ற அமைப்புகளை அதற்காக பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளதால், இது சம்பந்தமாக அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளது.

இதனிடைய இராணுவ நடவடிக்கை அல்லாத குற்றச் செயல்களில் ஈடுபட்ட படையினர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும் அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கருத்து வெளியிட்டுள்ளமை அரசாங்கத்திற்குள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் முன்னர் இராணுவத் தளபதியின் அனுமதியை பெற வேண்டும் என ரத்ன தேரர் கூறியமை பாரதூரமான விடயமாக மாறியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் சபாநாயகரின் அனுமதியை பெற வேண்டியதில்லை என்ற நிலையில், இராணுவ உறுப்பினர்களை கைது செய்யும் போது இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருப்பது குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியாகும்.

இது நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தை கவனத்தில் கொள்ளாது படையினருக்கு விசேட சிறப்புரிமையை வழங்கும் செயலாகும் என சட்டத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அத்துரலியே ரத்ன தேரரின் சில கருத்துக்கள் அரசாங்கத்திற்கு எதிராக இனவாத சக்திகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.