உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.
அத்துடன் உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பில் தமது பரிந்துரைகளை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சிடம் முன்வைக்கவுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் மஞ்சுள பிரனாந்து கடந்த வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவின் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில் ஆணைக்குழு தமது பரிந்துரைகளை விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் முன்வைக்கவுள்ளது.
எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணத்தை திருத்தம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.மின்கட்டணம் திருத்தம் தொடர்பான தமது யோசனையை மின்சார சபை மின்சார துறை மற்றும் வலுசக்தி அமைச்சிடம் முன்வைத்துள்ளது.