தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 24.06.2023 சனிக்கிழமை வீஸ்பாடன் நகரில் சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு கல்வியாண்டும் மாணவர்களுக்கு உடல், உளவளத்தையும் புத்துணர்வையும் ஏற்படுத்தவும், விட்டுக்கொடுப்பு , தோழமை உணர்வு , வெற்றி தோல்வியை சமமாக மதிக்கும் உயரிய பண்பு போன்ற மாந்த விழுமியங்களை தமிழாலய மாணவர்களுக்கிடையே வளர்க்கும் நோக்கோடு அண்டைத் தமிழாலய மாணவர்களை இணைத்து வருடாந்தம் நடாத்தப்படும் பாட்சுவல்பாக் தமிழாலய விளையாட்டுப் போட்டியில் இவ்வாண்டும் பிராங்பேர்ட் , டார்ம்ஸ்ரட் பூர்ஷ்ரட், மோர்பெல்டன் மற்றும் பென்ஸ்கைம் தமிழாலய மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் வகையில் பார்வையாளர்களாக முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் நகரத்தில் வாழும் தமிழ் மக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
காலை 9.30 மணிக்கு தமிழர் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் மங்கல விளக்கேற்றலுடன். தேசியக் கொடிகள் மற்றும் தமிழாலய கொடிகள் ஏற்றப்பட்டு, அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றிப் பதக்கம் செயற்பாட்டாளர்களால் வழங்கி மதிப்பளிக்கப் பட்டது.
போட்டிகள் நிறைவெய்திய பின்னர் சிறந்த விளையாட்டு வீரர்களாக தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. நிறைவில் தேசியக் கொடிகள் மற்றும் தமிழாலயக் கொடி இறக்கப்பட்டு தமிழர்களில் உணர்ச்சிப் பாடலுடன் நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு பெற்றது.