நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின் ஊடாக பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நுவரெலிய மாவட்டத்தில் 7758 பேர் உள்ளடங்கிய 2288 வீடுகளுக்கு 1021 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கண்டி மாவட்டத்தில் மலையகத்தில் அதிக அளவிலான நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் பிரம்மாண்டமான குடிநீர் திட்டம் புஸ்ஸல்லாவை நியூ பீகாக் தோட்டத்தில் இடம்பெற்று வருகிறது.
6310 பயனாளர்கள் ஏறக்குறைய 1840 குடும்பங்கள் பயன்பெறவுள்ள இத்திட்டம் 453 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தை நான் நேரடியாக பார்வையிட்டதுடன் இதனை துரிதகதியில் நிறைவு செய்து இப்பகுதியில் நெடுங்காலமாக காணப்படும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வையும் பெற்றுக் கொடுக்க உள்ளேன்.
இது மாத்திரமன்றி பதுளை மாவட்டத்தில் 470 வீடுகளில் உள்ள 1668 பயனாளர்கள் பயனடையும் வகையில் 146 மில்லியன் ரூபாய் செலவில் குடிநீர் திட்டமும் ரத்தினபுரி மாவட்டத்தில் 420 வீடுகளை சார்ந்த 1624 பயனாளர்கள் பயனடையும் விதத்தில் 132 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் குடிநீர் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா நோய் தொற்று மற்றும் பொருளாதார சிக்கல்கள் நாட்டின் நிலவிய போதிலும் கடந்த காலங்களில் 24,581 பயனாளர்கள் பயனடையும் வண்ணம் 5239 வீடுகளுக்கு 789 மில்லியன் ரூபா செலவில் இந்நீர் திட்டங்கள் நுவரெலிய மாவட்டத்திலும் 863 பயனாளர்கள் பயனடையும் வண்ணம் 976 வீடுகளுக்கு 93 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பதுளை மாவட்டத்திலும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என பாரத் தெரிவித்தார்.
மேலும் நுவரெலிய மாவட்டத்தில் 8.4 மில்லியன் நிதி ஒத்துக்கீட்டில் 1500 க்கும் அதிகமான மாணவர்கள் பயனடையும் விதத்தில் சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிவறைகள் பொதுக் குடிநீர் திட்டம் போன்றவை சுகாதாரம் மேம்பாட்டு திட்டத்தில் உள்ளடங்கும் முக்கிய அம்சங்கள் ஆகும். அத்தோடு 125.75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 12,575 பயனாளர்கள் பயனடையும் விதத்தில் தனியான கழிவறைகள் அமைக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது மாத்திரமன்றி நுவரெலியா மாவட்டத்தில் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 551 தனி கழிப்பறைகளை அமைப்பதற்கான வேலை திட்டமும் இம்மாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி இவ்வேளை திட்டங்களை பராமரிப்பதற்காக இளைஞர் யுவதிகளுக்கான விசேட பயிற்சி நெறி வழங்கப்பட்டு அவர்களை பெருந்தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நுட்பவியலாளராகவும் நியமனங்களை வழங்குவதற்கும் நாம் வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அத்தோடு குடிநீர் பரிசோதிப்பு நிலையம் ஒன்றை நிதியத்தின் நுவரெலிய மாவட்ட பணிமனையிலும் ஆரம்பித்து வைத்துள்ளோம்.
எமது மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பது எமது முதன்மை நோக்கமாகும் அந்த வகையில் அமைச்சர் ஜீவன் அவர்களின் வழிகாட்டலில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக பல நிலைப்பேண்தகு அபிவிருத்தி திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.