கற்பிட்டி – பாலாவி வீதியில் 4 இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

98 0

கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் கரம்பை பகுதியில் காரொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதோடு, ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது.

சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை கடத்திச் செல்வதாக நேற்றிரவு கற்பிட்டி விஜய கடற்படைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, பொலிஸாரோடு இணைந்து கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் கரம்பை பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் வைத்து காரொன்றை மறித்து சோதனை செய்துள்ளனர்.

 

இதன்போது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதன்போது, 9 பெட்டிகளில் சுமார் 4 இலட்சத்து 23 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் சட்ட விரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் வந்திருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் வலி நிவாரணிகளுக்கு மாற்றாக இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, வைத்தியரின் பரிந்துரை சீட்டு இன்றி இவற்றை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த போதை மாத்திரைகள் கற்பிட்டியிலிருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, கைதான சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளை நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கடற்படை பிரிவினர் தெரிவித்தனர்.